சென்னை மாநகராட்சியில் திமுக- அதிமுக கவுன்சிலர்கள் அடிதடி- பட்ஜெட் உரை கிழிப்பு
சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்களை அதிமுகவினர் சிலர் சட்டையை பிடித்து இழுத்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பட்ஜெட் உரையை திமுக உறுப்பினர்கள் கிழித்து எரிந்ததை அடுத்து அவையை விட்டு அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் 2016-17ம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கூட்டம் தொடங்கியதும் மேயர் சைதை துரைசாமி சிறப்பு தீர்மானத்தை படிக்க ஆரம்பித்தார்.

அதில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து மற்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி பதவிகளில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, சீனியர் சிட்டிசன்களுக்கு இலவச பஸ் பாஸ் ஆகிய திட்டங்கள் தொடர்பாக முதல்வருக்கு நன்றி தெரிவித்து சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் அம்மா புராணம் பாடினார்.
திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு
அதன்பிறகு, துறை வாரியாக சாதனைகளை மேயர் படிக்க தொடங்கினார். அப்போது, மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு 48 சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் பள்ளிகளில் கல்வி தரம் உயர்ந்துள்ளது என்றும் மேயர் பேசினார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர் பி.வி.தமிழ்செல்வன் எழுந்து, `சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்டு உள்ள புறநகர் பகுதி பள்ளிகளுக்கு இந்த சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. பழைய மாநகராட்சியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளது என்று கூறியபடி மேயரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். இதை தொடர்ந்து அவர் வெளிநடப்பு செய்தார்.
வெளிநடப்பு
பின்னர் திமுக கவுன்சிலர்கள் அனைவரும் எழுந்து நின்று, ‘சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு எந்த சலுகைகளும் வழங்கவில்லை. அப்படி இருக்கும்போது, நீங்கள் சாதனை, சாதனை என்று பேசிக்கொண்டிருக்கிறீர்களே?' என்றனர். தொடர்ந்து, அவர்கள் மன்றக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து கொண்டிருந்தனர்.
சட்டை கிழிப்பு
அப்போது, திடீரென அதிமுக கவுன்சிலர்கள் சிலர், திமுக கவுன்சிலர்கள் சட்டையை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தினர். இதில் திமுக கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோசுக்கு லேசான அடி விழுந்தது. இதனால், பரபரப்பான சூழ்நிலை உருவானது. சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் திமுக உறுப்பினர்கள் மன்ற நடவடிக்கையில் கலந்து கொண்டனர். அப்போது, பட்ஜெட் அறிவிப்புகளை மேயர் வெளியிட்டார்.
மேயர் அறிவிப்பு
இதனைத்தொடர்ந்து சென்னையில் மாநகராட்சி சமூக நலக்கூடங்களில் திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கட்டணம் கிடையாது என அறிவித்தார். பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் எனவும் மேயர் தெரிவித்தார். மேலும் டிஜிட்டல் மேப் மூலம் குப்பைகள் அகற்றம், குப்பைகள் அள்ளுதல் மற்றும் ஆறுகள் துர்வாருதல், சாலைகள் செப்பனிடுதல் போன்ற பணிகளை பார்வையிட ஐஐடியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும் என்றும் அறிவித்தார். சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்தை மேம்படுத்த 20 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்படும் எனவும் மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.
பட்ஜெட் உரை கிழிப்பு
அப்போது திமுக கவுன்சிலர்கள் எழுந்து "கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எந்த திட்டமும் நிறைவேற்றபடவில்லை. தற்போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் வெறும் கண்துடைப்பு என்று கோஷமிட்டனர். தேர்தல் ஸ்டன்ட் என்று கூறி அவர்கள் பட்ஜெட் நகலை கிழித்து எறிந்தனர். இவர்களுடன் காங்கிரஸ் உறுப்பினர் தமிழ்செல்வனும் எழுந்து கோஷம் எழுப்பினார்.
வெளியேற்றம் , வெளிநடப்பு
இதனால் ஆவேசமடைந்த அ.தி.மு.க.வினர் தி.மு.க. வினரை கண்டித்தனர். அப்போது தி.மு.க-அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி கூட்டத்தில் இருந்து தி.மு.க. உறுப்பினர்களை மேயர் சைதை துரைசாமி வெளியேற்றினார்.
தி.மு.க.வை தொடர்ந்து பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என்று கூறி காங்கிரஸ், தே.மு.தி.க. உறுப்பினர்கள் 2வது முறையாக வெளிநடப்பு செய்தனர்.
பரபரபப்பான பட்ஜெட் கூட்டம்
சென்னையைப் போல கோவை மாநாகராட்சியிலும் நேற்று மேயர் பட்ஜெட் உரை வாசித்த போது திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications