மிஸ்டு கால் விவகாரம்... 8ம் வகுப்பு மாணவி தற்கொலை... தனியார் பஸ் டிரைவர் உட்பட 3 பேர் கைது
நாமக்கல்: மிஸ்டு கால் கொடுத்து 8ம் வகுப்பு மாணவியைத் தற்கொலைக்கு தூண்டியதாக, தனியார் பேருந்து டிரைவர், கண்டக்டர் உட்பட 6 பேர் மீது திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்செங்கோடு அருகே நெசவாளர் காலனியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி முருகன். இவரது 14 வயது மகள் சுஸ்மிதா. அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த சுஸ்மிதா, தினமும் பள்ளிக்கு காலையும், மாலையும் தனியார் பேருந்தில் சென்று வந்துள்ளார்.

சமீபகாலமாக மாணவி தினமும் பள்ளி முடிந்து மாலையில் லேட்டாக வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அதோடு, வீட்டுக்கு வந்ததும் அவரது செல்போனிற்கு மிஸ்டு கால் அடிக்கடி வருவதையும் அவரது பெற்றோர் கவனித்துள்ளனர். இது தொடர்பாக சுஸ்மிதாவை அவர்கள் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த, 22ம் இரவும் சுஸ்மிதா போனில் மிஸ்டு கால் வந்துள்ளது. இதைக் கண்டு கோபமடைந்த அவரது பெற்றோர், மாணவியைக் கடுமையாக எச்சரித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி அன்றிரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக திருச்செங்கோடு ரூரல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, சமீபகாலமாக தனது மகளின் செல்போனிற்கு சிலர் அடிக்கடி மிஸ்டுகால் கொடுத்து டார்ச்சர் செய்து வந்ததாக முருகன் போலீசில் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மாணவியின் மொபைல் போனுக்கு மிஸ்டு கால் கொடுத்தது யார் என போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது, பிரசாத், ரஜினி, கோகுலகண்ணன், பூலாம்பட்டி அருள், இடைப்பாடி சீனிவாசன், சுரேஷ் ஆகியோர் தொடர்ந்து மாணவிக்கு மிஸ்டு கால் கொடுத்தது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் மாணவி பயணம் செய்த தனியார் பேருந்தில் டிரைவர் மற்றும் கண்டக்டர்களாக பணி புரிந்து வருபவர்கள்.
அதனைத் தொடர்ந்து, மாணவியை தற்கொலைக்கு துாண்டியதாக இவர்கள் 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் தற்போது அருள், சீனிவாசன், சுரேஷ் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற மூன்று பேரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications