ஒரே ஆண்டில் 3 முதல்வர்களை பார்த்த ஒரே ஆளுநர் வித்யாசாகர் ராவ்... டைம் லைன்
தமிழகத்தில் இருந்து விடைபெற்று விட்டார் வித்யாசாகர் ராவ். இவர் பதவியில் இருந்த ஓராண்டு காலத்தில்மூன்று முதல்வர்களை பார்த்துள்ளார்.
Recommended Video

சென்னை: கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதியன்று பொறுப்பு ஆளுநராக சென்னை வந்த வித்யாசாகர் ராவ், அக்டோபர் 5ஆம் தேதியுடன் விடை பெற்று விட்டார். தனது பதவி காலத்தில் 3 முதல்வர்களை பார்த்த ஒரே ஆளுநர் என்ற பெருமையை பெற்றுள்ளார் வித்யாசாகர் ராவ்.
தமிழகத்தின் ஆளுநராக இருந்த ஆந்திரா முன்னாள் முதல்வர் ரோசய்யாவின் பதவி காலம் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இதையடுத்து, தமிழகத்தின் புதிய ஆளுநர் பொறுப்பை மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் கவனிப்பார் என்று அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார். இதைத்தொடர்ந்து, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார் வித்யாசாகர் ராவ்.

ஆளுநர் வித்யாசாகர் ராவ்
இப்படி எல்லா விதிகளையும் பின்பற்றி தான் தமிழகத்திற்கு ஒரு பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் நியமிக்கப்பட்டார். எந்த நேரத்தில் இவர் தமிழ்நாட்டுக்கு பார்ட் டைம் முதல்வராக காலெடுத்து வைத்தாரோ தெரியவில்லை. வந்த நாள் முதலே சர்ச்சைகள்தான்.

செப்டம்பர் 2ல் சென்னை வருகை
கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி சென்னை வந்த ஆளுநரை நேரில் சந்தித்து பூங்கொத்து வாழ்த்து தெரிவித்தார் ஜெயலலிதா. நல்ல நிலையில் முதலும் கடைசியுமான சந்திப்பாகி போனது.

அக்டோபர் 1ல் மருத்துவமனை
அதே ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதியன்று உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அக்டோபர் 1ஆம் தேதியன்று அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றார்.

நள்ளிரவில் பதவி பிரமாணம்
ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதியன்று மரணமடையவே, பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவைக்கு டிசம்பர் 5ஆம் தேதி நள்ளிரவில் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஜெ. இறுதிச்சடங்கு
டிசம்பர் 6ஆம் தேதியன்று ஜெயலலிதாவிற்கு நடைபெற்ற இறுதிச்சடங்கில் பங்கேற்றார் வித்யாசாகர் ராவ். அதுமுதலே அவருக்கும் தமிழகத்திற்கும் பரபரப்பு பற்றிக்கொண்டது.

முதலும் கடைசியுமான உரை
2017 ஜனவரி 23ஆம் தேதி சட்டசபையில் முதன்முறையாக உரை நிகழ்த்தினார். அதன்பின்னர் அவர் சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.

சசிகலா - ஓபிஎஸ் சர்ச்சைகள்
பிப்ரவரி மாதம் 5ஆம் தேதியன்று ஒ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து முதல்வராக பதவியேற்க தம்மை அழைக்குமாறு உரிமை கோரி பிப்ரவரி 9ஆம் தேதி ஆளுநரை சந்தித்து கடிதம்
அளித்தார் சசிகலா. அதே நாளில் ஓ.பன்னீர் செல்வமும் ஆளுநரை சந்தித்தார்.

அழைக்காத ஆளுநர்
ஆளுநர் சசிகலாவிற்கு பதவிபிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுக்கவில்லை. சசிகலாவை பதவியேற்க அழைக்க ஆளுநர் காலதாமதம் செய்தார் என்ற புகார் எழுந்தது. காரணம் சசிகலாவின் கழுத்துக்கு மேல் கத்தியாக தொங்கிய சொத்துக்குவிப்பு வழக்குதான். நினைத்தது போலவே சசிகலா பிப்ரவரி 15ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறைக்கு சென்றார்.

எடப்பாடி பழனிச்சாமி
அதைத்தொடர்ந்து பிப்ரவரி16ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார்.

துணைமுதல்வராக பதவி பிரமாணம்
பிளவு பட்டிருந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி இணைந்த பின்னர் பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். சில அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

19 எம்எல்ஏக்கள் கடிதம்
இதனையடுத்து டிடிவி தினகரன் ஆதரவு நிலையை எடுத்த 19 எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்றக்கோரி கடிதம் அளித்தனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவு திரும்ப பெறுவதாக கூறினர்.

எதிர்கட்சித்தலைவர் சந்திப்பு
இதற்கிடையில் தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், இடதுசாரிகள் தலைவர்கள், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை சந்தித்து சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரினர். டிடிவி தினகரனும் ஆளுநரை சந்தித்து பேசினார். ஆனால் அமைதி காத்தார் ஆளுநர்.

கடைசி முறை என்ற ஸ்டாலின்
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஆளுநரை சந்திப்பது கடைசி முறை என்று கூறினார் ஸ்டாலின் அவர் சொன்னது போலவே அதன்பிறகு ஆளுநரை அவர் சந்திக்கவேயில்லை. தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டு விட்டார். இதனையடுத்து அக்டோபர் 5ஆம் தேதியன்று விடைபெற்றார் வித்யாசாகர் ராவ்.

வித்யாசாகர் ராவ் செய்த புதுமைகள்
ராஜ்பவனில் திருவள்ளுவர், ஔவையார் சிலை திறப்பு, சாமானிய மக்களும் ஆளுநர் மாளிகையை பார்வையிடும் வகையில் அனுமதி அளித்தார்.

ஆளுநரின் தமிழக பணிகள்
இவர் இந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 70 நாட்கள்வரை மட்டுமே தமிழகத்தில் தங்கி தன் பணிகளை கவனித்திருக்கிறார். இவர் தமிழ்நாட்டுக்கு வந்தாலே பிளாஷ் நியூஸ்தான். என்ன நடக்குமே என்ற பதற்றத்தை ஏற்படுத்தி விட்டார் வித்யாசாகர் ராவ்.

கோவில்களில் தரிசனம்
இவர் பொறுப்பு ஆளுநராக வந்த பின்னர் ஊட்டி மலர் கண்காட்சி, யோகா தினத்தில் பங்கேற்பு மற்றும்
இவர் தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன், வேலூர் தங்க கோயிலில் தரிசனம் செய்துள்ளார்.

3 முதல்வர்கள்
ஒரு முதல்வர் தனது பதவி காலத்தில் இரண்டு ஆளுநர்களை பார்த்திருக்கலாம். ஆனால் பொறுப்பு ஆளுநராக ஓராண்டு காலம் பதவியில் இருந்த வித்யாசாகர் ராவ் தனது பதவி காலத்தில் ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என 3 முதல்வர்களை பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications