விஜய் தவெக மாநாட்டில் பங்கேற்க போகும் பிரபலங்கள்? திடலில் இந்த விஷயத்தை நோட் பண்ணீங்களா?
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் நடைபெறவிருக்கும் தவெக கட்சி மாநாடு பெரும் எதிபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஏற்பாடுகள் கட்சி மாநாட்டிற்காக செய்யப்பட்டுள்ளன. மாநாட்டு திடலில் 100 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியை விஜய் ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இதற்கிடையே, மாநாடு நடைபெறும் பகுதியில் வரிசையாக கேரவன்கள் நிறுத்தப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெறுகிறது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மொத்தம் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஏற்பாடுகளுடன் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

மாநாட்டிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் பஸ்கள் மற்றும் வேன்களில் வர உள்ளனர். இவர்களின் வாகனங்களை நிறுத்த அருகிலேயே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநாடு முழுவதும் மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு தேவையான மின்சாரம் அனைத்தும் முழுக்க முழுக்க ஜெனரேட்டர்கள் வாயிலாக பெறப்படுகிறது.
மாநாட்டில் விஜய் 6 மணியளவில் உரையாற்றுவார் என்று சொல்லப்படுகிறது. 600 மீட்டர் நீளத்திலும் அமைக்கப்பட்டுள்ள ரேம்பில் நடந்து சென்றவாறு மாநாட்டுத்திடலில் கூடியிருக்கும் தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்களை பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார். மாநாட்டு வளாகத்திற்குள் செல்வதற்கு 5 வழிகளும், வெளியே வருவதற்கு 15 வழிப்பாதைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாநாட்டில் அதிகளவு தொண்டர்கள் கூடுவதால் தற்காலிகமாக செல்போன் டவர் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாநாட்டு நிகழ்வை வெகுதொலைவில் இருந்து காணும் வகையில் மாநாட்டு திடலின் பிரதான இடங்களில் பெரிய அளவிலான டிஜிட்டல் திரைகள் உள்ளன. மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக 100-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள், 350 நடமாடும் டாய்லெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டின் பாதுகாப்பு கருதி சுமார் 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 75 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இதற்கிடையே மாநாடு நடைபெறும் இடத்தில் வரிசையாக கேரவன்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால், நாளைய மாநாட்டில் முக்கிய பிரபலங்கள் யாரும் கலந்து கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சமூகத்தில் செல்வாக்கு உள்ள சிலரையும் கட்சியில் இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் விவாதித்து வருகிறார்கள். இந்த கேள்விக்கு எல்லாம் நாளை விடை தெரிந்துவிடும் என்பதே தவெக நிர்வாகிகள் சொல்லும் கருத்தாக உள்ளது.













Click it and Unblock the Notifications