பணமோசடி புகார்.. நத்தம் விஸ்வநாதன் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி வழக்கு
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு எதிரான வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை: பண மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு எதிரான வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் சபாபதி. இவரிடம் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கடந்த 2014இல் நடைபெற்ற மக்களைத் தேர்தலின்போது வாங்கிய பணத்தில் ரூ.2 கோடியே 97 லட்சத்து 90 ஆயிரத்து 700-ஐ திருப்பி வழங்கவில்லை எனவும், எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சபாபதி என்பவர் மனு செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் வாரம் ஒருமுறை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நத்தம் விஸ்வநாதனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு எதிரான பண மோசடி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சபாபதி மனு செய்துள்ளார். அதில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் அடியாள்கள் சிலர் என்னை கொலை செய்ய முயற்சிக்கின்றனர். நீதிமன்றம் நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், அதை மீறும் வகையில் நத்தம் விஸ்வநாதன் செயல்பட்டு வருகிறார்.
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திண்டுக்கல் வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications