கொங்கு நாட்டு கால்நடை திருவிழா.. பொள்ளாச்சியில் குவிந்த காளைகள், ஆடுகள், எருமைகள்!
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே சமத்தூரில், வானவராயர் பவுண்டேஷன் சார்பில், நடைபெற்ற கொங்கு நாட்டு கால்நடை திருவிழாவில் நூற்றுக்காண விவசாயிகள் பங்கேற்றனர்.
காளைகள், எருமைகள் ஆடுகள் என ஒரே இடத்தில் பலவகையான கால்நடைகள் இந்த திருவிழாவில் பங்கேற்றதை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
கால்நடை வளர்ப்பின் அவசியம் குறித்து, விளக்கும் வகையில், வானவராயர் பவுண்டேஷன் சார்பில், 'கொங்கு நாட்டு கால்நடை திருவிழா' கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள, சமத்தூரில் இருதினங்கள் நடைபெற்றன.
கண்காட்சியை, கோவை பாரதிய வித்யா பவன் மற்றும் பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரியின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் துவக்கி வைத்தார். சங்கர் வானவராயர் பவுண்டேஷன் தலைவர், சங்கர் வானவராயர் முன்னிலை வகித்தார்.

கோமாதா பூஜை
கண்காட்சியில், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, பாலக்காடு உள்ளிட்ட பகுதியில் இருந்து, 480 காளை மாடுகள் பங்கேற்றன. முதற்கட்டமாக, 108 நாட்டு மாடுகளை வைத்து, கோமாதா பூஜை நடத்தப்பட்டது.
காளைகள், எருமைகள், ஆடுகள்
இதில், தார்பார்க்கார், சாயிவால் உள்ளிட்ட, இந்திய வகை காளைகள்; ஆட்டு கிடாய்கள் பங்கேற்றன. ஈரோடு, காங்கேயத்தைச் சேர்ந்த, எருமை, ஜப்பாரி, பூச்சி, முரா வகை எருமைகள் இடம் பெற்றன. பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்து, விவரங்களை கேட்டறிந்தனர்.
கால்நடைகளுக்கு போட்டி
தஞ்சாவூர் குட்டை மாடு, கர்நாடகா மேல்திட் குட்டை மாடு, ஹலிகர் எருது, குஜராத் குட்டை ஆடு உள்ளிட்டவை, இடம் பெற்றிருந்தன. முதலில் இளங்கெடாரி, இளங்காளை, இரண்டு பல், நான்கு பல் மயிலை கெடாரி, ஆறு பற்களுக்கு மேல் கறவை மாடுகள், இரண்டு பற்களுக்கு கீழ் செவலை இளங்கன்றுகள், செவலை மாடு உள்ளிட்ட, 16 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
காங்கேயம் காளை, குதிரை
காங்கேயம் வண்டிக்காளைகள் மற்றும் அழகான ஆண் குதிரை நிகழ்ச்சி, சிறந்த கால்நடை, கலைத்திறன் போட்டி, பால் கறக்கும் போட்டி உள்ளிட்டவை, 16 பிரிவுகளில் நடத்தப்பட்டன.
நியூசிலாந்து கால்நடை மருத்துவர்
நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கால்நடைகளின் சிறப்பு மருத்துவர் ஜான் ஹென்றி இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். விவசாயிகளுக்கு கால்நடைகளின் ஆரோக்கியம் குறித்து தெரிவிப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.
இலவச முகாம்
கால்நடைத்துறை மூலம், இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. கோவை மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமி தலைமையில், பொள்ளாச்சி கால்நடைத்துறை உதவி இயக்குனர் நாகராஜ் மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொழில்முனைவோர்கள்
மொத்தம், 55 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. விவசாயிகளிடையே கால்நடை வளர்த்தல் தொழிலில் ஆர்வத்தை ஏற்படுத்தி, தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். கருத்தரங்கம், பயிலரங்கம் வாயிலாக, பண்ணைக்கருவிகள் செயல் விளக்கம், பால் உற்பத்தி, சத்தூட்டம், நோய் எதிர்ப்பு, நோய் தடுப்பு போன்ற தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications