கார்த்தி சிதம்பரம் திடீர் கைது ஏன்? பின்னணியில் 'டர்ட்டி பாலிடிக்ஸ்'?
Recommended Video

சென்னை: கார்த்தி சிதம்பரத்தை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திடீரென சிபிஐ கைது செய்தது ஏன் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக அந்திய முதலீடு செய்ய கார்த்தி சிதம்பரம் உதவியதாக எழுந்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் வெளிநாடு சென்று, இன்று சென்னைக்கு திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை திடீரென சிபிஐ கைது செய்துள்ளது.

திடீர் கைது
வெளிநாடு சென்றால் திரும்பி வரமாட்டார் என்பதால் அவருக்கு அனுமதி வழங்க கூடாது என்று சிபிஐ கூறிய வாதத்தை புறம்தள்ளிய நீதிமன்றம், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியது. அவரும், இந்தியாவுக்கு திரும்பினார். இந்த நிலையிலும், அவர் கைது செய்யப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இரு காரணங்கள்
சிபிஐ தன்னாட்சி பெற்ற விசாரணை அமைப்பு என கூறிக்கொள்ளப்பட்டாலும் அது மத்தியில் ஆள்பவர்கள் கைப்பாவையாகவே செயல்பட்டு வந்துள்ளது. கார்த்தி சிதம்பரம் விஷயத்திலும், பழிவாங்கும் நடவடிக்கை மற்றும் திசைமாற்றும் நடவடிக்கையாகவே ப.சிதம்பரம் போன்ற ஒரு பிரபலமானவரின் மகனான கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என்கிறார்கள் அரசியல்விமர்சகர்கள்.

கவனத்தை திருப்ப
நீரவ் மோடி, மேகுல் சோக்சி, த்வாரகா தாஸ் சேத் ஜுவல்லரி என பாஜக ஆட்சியில், மோசடி பட்டியல் நீண்டு கொண்டே போவதால் அதில் இருந்து கவனத்தை திசை திருப்ப இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளதாக தெரிகிறது. முறைகேடு விவகாரங்களில் காங்கிரசின் குற்றச்சாட்டுகளே பொதுமக்களிடம் அதிகம் சென்று சேருகின்றன. பாஜகவின் வக்காலத்து பேச்சுக்கள் எடுபடவில்லை. எனவே காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கவும் இந்த கைது நடவடிக்கை பயன்படும் என மத்திய அரசு நினைக்கிறதாம்.

ஆதாரம் இல்லை
மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய, அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற காரணம்தான் கூறப்பட்டுள்ளது. எனவே இதுவரை அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவை நடத்திய ரெய்டுகள், விசாரணைகளில் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பது உறுதியாகிறது. எனவேதான் குற்றச்சாட்டு அடிப்படையில் கைது செய்யாமல், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என காரணம் கூறி கைது செய்துள்ளது சிபிஐ.

மன உளைச்சல்
ஆதாரங்களே இல்லாமல் வழக்கு நடத்தினால், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் என்ன தீர்ப்பு வெளியானதோ அதுதான் வர வாய்ப்புள்ளது. ஆனால் அதுவரை மக்கள் கவனத்தை திசை திருப்பவும், காங்கிரஸ் தலைவரான ப.சிதம்பரத்தின் மகனுக்கு விசாரணை என்ற பெயரில் மனரீதியாக நெருக்கடி கொடுக்கவுமே இந்த கைது பயன்படுத்தப்படும் என்கிறார்கள் இந்த வழக்கை நீண்ட காலமாக கவனித்து வருபவர்கள்.
ஆனால், சிபிஐ தரப்போ, சமீபத்தில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணையை நகர்த்தியதாகவும், ஆனால், அதற்கு கார்த்தி சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என்பதாலேயே கைது செய்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications