தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுங்கள்: கருணாநிதி வேண்டுகோள்
சென்னை: தை முதல் நாளை தமிழர் திருநாளாக, தமிழ்ப்புத்தாண்டின் துவக்கமாகச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடிட தமிழர்கள் அனைவரும் முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
9-ந் தேதி அன்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் பொங்கல் திருநாளை தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழர்கள் உள்ளம் தோறும் உவகைப் பெருக்குடன் இல்லந்தோறும் இன எழுச்சியோடு கொண்டாட வேண்டும் என்று 3-வது தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம்.

23-1-2008 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா ஆற்றிய உரையில், தமிழர்களுக்கென்று "திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது, ஒட்டுமொத்தமாக எல்லா தமிழ் அறிஞர்களும் ஒப்புக்கொண்டுள்ள உண்மை என்பதால்; தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது' என்றும் அறிவித்தார்.
மறைமலை அடிகள் தலைமையில் வி.கல்யாண சுந்தரனார், கா.சுப்பிரமணியப்பிள்ளை, சச்சிதானந்தப் பிள்ளை, வெங்கடசாமி நாட்டார், சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் எல்லாம் கலந்து கொண்ட கூட்டத்தில், திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டாகப் பின்பற்றுவது, அதனையே தமிழாண்டு எனக் கொண்டாடுவது, வழக்கத்தில் திருவள்ளுவர் காலம் கி.மு.31-யைக் கூட்டினால் திருவள்ளுவராண்டு வரும் என்பதனை மேற்கொள்வது என்பனவாகும்.
மலேசியா நாட்டில் தமிழர்கள் தற்போது தை முதல் நாளையே புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் செந்தமிழரெல்லாம் பெரு மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்ளத்தக்க வகையில் செய்யப்பட்ட அறிவிப்பாக, கவர்னர் பர்னாலா அறிவிப்பு கருதப்பட்டு, தமிழ் மக்கள் எல்லாம் அந்த ஆண்டு பொங்கல் விழாவினை எப்போதும் இல்லாத வகையில் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக எப்படியெல்லாம் தி.மு.க. ஆட்சியிலே கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களுக்கெல்லாம் மூடுவிழா நடத்த முற்பட்டாரோ, அப்படியே தமிழின அடையாளத்தைக் காட்டும் இந்த அறிவிப்புக்கும் மூடு விழா நடத்திட ஏற்பாடுகளை அவசர அவசரமாகச் செய்தார்.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 23-8-2011 அன்று பேரவையில் கூறும்போது, "தமிழ்ப் புத்தாண்டை தை மாதம் தொடங்க எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சித்திரையில் தொடங்குவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. கருணாநிதி தன் சுய விளம்பரத்துக்காக, மக்கள் மன உணர்வைப் புண்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது" என்றார்.
தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக ஜெயலலிதா ஆட்சியிலே அது மாற்றப்பட்டு விட்டது. அவரது அந்த அறிவிப்பினை பா.ஜ.க. அப்போதே அவசர அவசரமாக வரவேற்றது.
இந்த வரலாற்று உண்மையை மறைக்கத்தான் இன்றைக்கு இருக்கும் ஆட்சியாளர்கள் பெரு முயற்சி எடுத்து, சித்திரை தான் தமிழ் ஆண்டின் துவக்கம் என்று மாற்றி ஆணை பிறப்பித்திருக்கிறார்கள். அவர்களின் நடவடிக்கைக்கு தமிழ்நாட்டு மக்கள் எந்த மரியாதையும் கொடுத்ததாக தெரியவில்லை. வெளிநாட்டிலே வாழும் தமிழர்கள் கூட இந்த உண்மையை புரிந்து கொண்டு; தை முதல் நாள் தான் தமிழர்களின் திருநாள், தமிழ்ப்புத்தாண்டின் துவக்கம் என்று உறுதி செய்து கொண்டு, கொண்டாடுகிறார்கள்.
எனவே அ.தி.மு.க. அரசு அதை ஒப்புக்கொள்கிறதோ இல்லையோ, அதைப்பற்றிக் கவலைப்படாமல், தை முதல் நாளை, தமிழர் திருநாளாக, தமிழ்ப்புத்தாண்டின் துவக்கமாகச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடிட தமிழர்கள் அனைவரும் முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications