இன்னும் 6 மாதங்களில் மின்பற்றாக்குறை தீரும்: நிதிக்கமிஷனிடம் ஜெயலலிதா உறுதி
சென்னை: தமிழகத்தில் நிலவும் மின்சார பற்றாக்குறை இன்னும் ஆறு மாதங்களில் தீரும் என நிதிக் கமிஷனிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார்.
சென்னையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்த 14-வது நிதிக்கமிஷன் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-

மின்பற்றாக்குறைக்கு காரணம்....
மின்சார சப்ளை மற்றும் தேவையின் நிலை குறித்து நிதிக்குழு உறுப்பினர் முண்டல் கேள்வி எழுப்பினார். இது குறித்து சில உண்மைகளை விளக்க வேண்டியதுள்ளது. மின்சார நிலையில், இந்த அரசு உண்மையிலேயே மிகப்பெரிய பிரச்சினையை சந்தித்து அதை கையாண்டு வருகிறது. ஆனால் இந்த நிலை இந்த அரசால் ஏற்பட்டதல்ல.

பல திட்டங்கள்...
மூன்றாம் முறையாக நான் 2011-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபோது, தமிழகம் படுபாதாள இருளுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் மாநிலமாக இருந்தது.மின்சார உற்பத்திக்காக 2001-06-ம் ஆண்டுகளில் எனது அரசு பல திட்டங்களைத் தீட்டி இருந்தது. அந்த திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி முடித்திருந்தால், தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாகத்தான் இருந்திருக்கும்.ஆனால் கடந்த ஆட்சியாளர்கள், அந்த திட்டங்களை அமல்படுத்துவதற்கு எந்தவொரு முனைப்பும் காட்டாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் 2007-ம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு நிலையான மின்பற்றாக்குறை நிலவத்தொடங்கி, 2011-ம் ஆண்டு மே வரை நீடித்தது.

குறுகியகால திட்டம்....
அப்போது மின்சாரத்தை வாங்க வேண்டிய சூழ்நிலை எழுந்தது. மின்சார வாங்குவதற்கு பல வகைகள் இருந்தன. அதில் நீண்டகால ஒப்பந்தம் என்ற முறை உண்டு. மற்ற மாநிலங்களுடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், மின்சாரத்தின் விலை குறையும். அதிக ஆண்டுகளுக்கு மின்சாரம் பெறலாம் என்ற உத்தரவாதம் கிடைக்கும்.

இருண்ட சூழ்நிலை....
அதோடு, மின் பகிர்மானப் பாதை (காரிடார்) அமைப்பதில் எங்களுக்கு மத்திய அரசால் முன்னுரிமை கிடைக்கும் என்ற நன்மைகள் இருந்தன. ஆனால் கடந்த கால அரசு, வேண்டுமென்றே, மின்சாரம் வாங்குவதற்கு குறுகிய கால முறையை தேர்வு செய்தது. இதனால்தான் எனது அரசு, இருண்ட சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.

முன்னுரிமை இல்லை...
அப்போது நான்காயிரம் மெகாவாட் மின்சாரம் மின்பற்றாக்குறை இருந்தது. இது எங்களால் ஆனதல்ல. இந்த சூழ்நிலைக்குள் சிக்கி அதை எதிர்கொள்ளும் அவல நிலைக்கு ஆளானோம். எனவே நாங்களும் மின்சாரம் வாங்கினோம். இதற்கு காலம் ஆகும் என்பது உங்களுக்கு தெரியும்.எனவே மின்மிகை மாநிலங்களுடன் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். ஆனாலும் மின்சார பகிர்மானப் பாதை அமைப்பதற்கு தமிழகத்துக்கு முன்னுரிமை கிடைக்கவில்லை. ஏனென்றால், மற்ற மாநிலங்கள், ஏற்கனவே நீண்டகால ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தன.

மத்திய அரசு தாமதம்....
இதனால்தான், குஜராத் மாநிலத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொண்டு வருவதற்கு ஒப்பந்தம் செய்திருந்தாலும், 150 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே கொண்டு வர முடிந்தது. இதுதான் இங்குள்ள நிலை.இது அரசியல் களமல்ல, ஆனால் உண்மையை கூறுகிறேன். நாங்கள் பல்வேறு புதிய மின் திட்டங்களை தொடங்கினோம். அவை தொடங்கி இந்த நேரத்தில் பயனளித்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால் வேண்டுமென்றே அவற்றுக்கான ஒப்புதலை மத்திய அரசு தாமதப்படுத்தியது.

பகிர்மான கேபிள்...
மிகவும் குறைந்த அளவு மின்சாரத்தையே தமிழகம் பெற்றது. மத்திய அரசு தர வேண்டிய ஒப்புதல்கள் மறுக்கப்படுகின்றன. உதாரணமாக, குண்டா மின் திட்டம், சில்லகல்லா மின் திட்டம் ஆகியவற்றை தொடங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் மத்திய அரசின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை.நான் இரண்டாம் முறையாக முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த மின் திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவைப்பட்டது. வனப்பகுதியில் 14 கி.மீ. நீளத்துக்கு பகிர்மான கேபிளை அமைக்க வேண்டும் என்பதற்கான ஒப்புதல் அது.

பிரச்சினைகள்...
மத்திய வனத்துறைதான் அந்த ஒப்புதலை வழங்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக அது தாமதப்படுத்தப்பட்டது. நாங்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு நினைவூட்டினோம். ஒரு பதிலும் கிடைக்கவில்லை. ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தோம். இதெல்லாம் மக்களுக்கான தேவைகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.இறுதியில் சுப்ரீம் கோர்ட்டை அணுகினோம். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் மத்திய அரசின் அனுமதி கிடைத்தது. இதுபோன்ற பிரச்சினைகளையும் நாங்கள் சந்தித்து வருகிறோம்.

முன்னெச்சரிக்கை....
மின்சார தேவை எவ்வளவு, இருப்பு எவ்வளவு என்பதில் முன்னெச்சரிக்கையாக இருக்கிறோம். எங்களுக்கு மின்சார சப்ளை செய்ய முடியும். முன்பு சில இடையூறுகளால் கட்டப்பட்டு இருந்தோம். இப்போது நான் சொல்கிறேன், மின்சார தேவைக்கும் சப்ளைக்கும் இடையே உள்ள இடைவெளி அடைக்கப்பட்டுவிட்டது.

மீண்டும் மின்பற்றாக்குறை....
இந்த ஆண்டு ஜூலையில் இருந்து அக்டோபர் வரை தமிழகத்தில் மின்வெட்டு இருந்ததில்லை. அந்த இடைவெளியை இரண்டு ஆண்டுகளில் அடைப்பதற்கு ராட்சச முயற்சியை எனது அரசு மேற்கொண்டது. இதுகுறித்து சட்டசபையில் நான் பேசினேன்.உடனே எதிர்பாராத விதமாக, தமிழகத்தில் உள்ள பல மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் செயலற்றுப்போயின. இன்றுவரை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனல் மின்நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் அனைத்தும் முழு வீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது மீண்டும் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மின்மிகை மாநிலமாக்க முயற்சி....
இதற்கு காரணம், மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படாமல் போனதால்தான். அனைத்திலும் ஒரே நேரத்தில் இது நிகழ்ந்தது. இருந்தாலும், எங்களால் முடிந்த அளவில் முயற்சி செய்கிறோம். இன்னும் 6 மாதங்களில் தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மட்டுமல்ல, மின்மிகை மாநிலமாக இருக்கும் என்பதை உங்களிடம் உறுதிபட கூறிக்கொள்கிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications