நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மோடியிடம் ஓ.பி.எஸ். கோரிக்கை
சென்னை: நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முதல்வர் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் மாநாடு நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது :-
‘‘எனது தலைவி ஜெயலலிதா ஆசியுடன் தமிழக அரசு சார்பில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். மத்திய திட்டக்குழுவை கலைத்துவிட்டு புதிய அமைப்பை உருவாக்கும் மத்திய அரசின் முடிவை தமிழக அரசு வரவேற்கிறது.
புதிதாக தொடங்கப்படும் அந்த அமைப்பில் மாநில முதலமைச்சர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் நேரடி பண பரிமாற்றம் திட்டம் பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மானிய தொகை அவர்களது வங்கி கணக்கில் சேர்க்கப்படுகிறது.
அதன்படி கல்வி உதவி தொகை, பேறு கால உதவிகள், சமூக பாதுகாப்பு பென்சன் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. பொது வினியோக திட்டத்துக்கான மானியங்களை நுகர்வோரின் வங்கி கணக்கில் சேர்க்க கூடாது என தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது.
ஏற்கனவே முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தை சமாளிக்க முடியாமல் பல நிர்வாக பிரச்சினைகள் ஏற்பட்டு பின்னர் அவை தீர்க்கப்பட்டன. மேலும் பொறுப்பற்ற தன்மை அற்ற நிலை ஏற்படும்.
மேலும் மண்எண்ணை மற்றும் உரங்களுக்கான மானியத்தையும் ரத்து செய்யக் கூடாது. வங்கிகளில் பணம் செலுத்தும் நேரடி மானிய திட்டத்தை மாநில அரசுகள் மூலமே செயல்படுத்த வேண்டும்.
ஏற்கனவே, மாநில அரசின் பயனாளிகளுக்கு நலம் அளிக்கும் பல திட்டங்களை வங்கிகள் மூலம் நடைமுறைப்படுத்தி வருகிறோம். அது போன்று நேரடி மானிய திட்டத்தையும் மாநில அரசுகள் மூலம் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications