சென்ட்ரல் குண்டுவெடிப்பு..தேசிய புலனாய்வுக் குழு விசாரணையை ஏற்க ஜெ. மறுப்பு.. மத்திய அரசு அதிர்ச்சி!
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தீவிரவாத இயக்கங்களின் தாக்குதலாக இருக்கலாமோ என்ற கோணத்தில் மத்திய அரசு பார்த்து விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் அந்த கூற்றை தமிழக அரசு நிராகரித்து விட்டதால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக போலீஸார் யாரையும் இதுவரை பிடித்து வைக்கவில்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதை தீவிரவாத தாக்குதலாக பார்த்தால் அதிமுக அரசின் மீதான இமேஜ் போய் விடும் என்ற பயத்தால் தமிழக அரசும், காவல்துறையும் இந்த வழக்கில் மேம்போக்காக செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பை தீவிரவாதத் தாக்குதலாக மத்திய அரசு கருதுகிறது. ஆனால் முதல்வர் ஜெயலலிதா அந்தக் கூற்றை ஏற்க மறுத்துள்ளார். மேலும் இந்த வழக்கை தேசிய புலனாய்வுக் குழு விசாரிக்கத் தேவையில்லை என்றும் ஜெயலலிதா கூறி விட்டார். அதற்குப் பதிலாக வெடிபொருள் சட்டத்தின கீழ் இந்த வழக்கை விசாரிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கொலை மற்றும் ரயில்வே சொத்துக்களுக்குச் சேதம் என்ற அளவில் மட்டுமே தற்போது தமிழக அரசு தனது சிபிசிஐடி மூலம் இந்த விசாரணையை நடத்தவுள்ளது.
மேலும் தமிழக காவல்துறையும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று மறுத்துள்ளது.
முன்னதாக ஒரு மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பெங்களூரைச் சேர்ந்த ஒரு அமைப்பு இதன் பின்னணியில் இருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம். மேலும் இந்த குண்டு பெங்களூரில்தான் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதில் சந்தேகமே இல்லை. இது தீவிரவாத தாக்குதல்தான் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் அதன் பின்னர் காவல்துறையின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு இதை ஒரு சாதாரண குற்ற வழக்காக பாவிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த தாக்குதலை தமிழக அரசே தீவிரவாதத் தாக்குதல் என்று அறிவித்து விட்டால் அது அதிமுகவின் பெயருக்குக் களங்கமாக அமையும் என்று அதிமுக அஞ்சுகிறதாம். எனவேதான் அதைத் தவிர்க்க இப்படி நடப்பதாக கூறுகிறார்கள்.
ஏற்கனவே இந்த குண்டுவெடிப்புக்கு தமிழக அரசின் பொறுப்பற்ற தன்மையே காரணம், முதல்வர் இருக்கிறாரா, அமைச்சர்கள் இருக்கிறார்களா, முறையான அரசுதான் செயல்படுகிறதா என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
எப்படியோ, தமிழக அரசின் போக்கு மத்திய அரசுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது மட்டும் நிச்சயம்.












Click it and Unblock the Notifications