5ஆம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் அதிமுக ஆட்சி… சாதனையும், சறுக்கல்களும்
சென்னை: அதிமுக அரசு நான்காவது ஆண்டினை இன்று சத்தமில்லாமல் கடந்திருக்கிறது. கடந்த ஆண்டு மூன்றாவது ஆண்டு நிறைவடைந்த போதே மூன்றாண்டு ஆட்சி முழுமையான வளர்ச்சி என்று முரசு கொட்டினார்கள். இந்த ஆண்டு அப்படி எந்தவிட ஆடம்பர போஸ்டர்களோ, அபரிமிதமான ஆர்ப்பாட்டங்களையோ காணமுடியவில்லை.
ஏன் இந்த மவுனம் என்று அதிமுகவினருக்கு மட்டுமல்ல தமிழக மக்கள் அனைவருக்குமே தெரியும். காரணம் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவியிழந்த ஜெயலலிதா, குற்றமற்றவர் என்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னரும் இன்னமும் முதல்வராக பதவியேற்க முடியாத நிலையில் இருக்கிறார்.
முதல்வர் நாற்காலியில் அமராமலேயே பேருக்கு முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக அனைவரும் குற்றம் சாட்டுகின்றனர். யார் முதல்வர் என்றாலும் ஆள்வது என்னவோ அதிமுகதானே. எனவே அதிமுக அரசின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் சாதித்தது என்ன? சறுக்கியது என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.

2011 மே 16
2011-ம் ஆண்டு மே 16-ம் தேதி மூன்றாவது முறையா (கணக்குப்படி 4) முதல்வராக ஜெயலலிதாவும், அவருடன் 31 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். அவர் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த மரியம்பிச்சை சாலை விபத்தில் மரணமடைந்ததால் முதல் அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்தது. அந்த துறை அமைச்சர் டி.கே.எம் சின்னையாவிற்கு கூடுதலாக வழங்கப்பட்டது.

எத்தனை முறை மாற்றம்
அப்போது தொடங்கி இப்போதுவரை 21 முறை அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்துள்ளது. 2011ஆம் ஆண்டில் நான்கு முறையும், 2012 ஆம் ஆண்டில் 4 முறையும், 2013 ஆம் ஆண்டில் 6 முறையும், 2014ஆம் ஆண்டில் 3 முறையும் ஜெயலலிதாவால் அமைச்சரவை மாற்றப்பட்டது.

முதல்வரே மாறினார்
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதை அடுத்து 2014 செப்டம்பர் 27 ஆம் தேதி பதவியை இழந்தார் ஜெயலலிதா. அதையொட்டி செப்டம்பர் 29 ஆம் தேதி முதலமைச்சராக ஒ.பன்னீர்செல்வமும், அவருடன் அனைத்து அமைச்சர்களும் அழுது கொண்டே மீண்டும் பதவியேற்றனர்.

பன்னீர் ஆட்சியிலும் மாற்றம்
முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பிறகு இரண்டு முறை அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கிறது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்த செந்தூர் பாண்டியனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அடுத்து, இலாகா இல்லாத அமைச்சராக அவர் அறிவிக்கப்பட்டார். அவர் வகித்து வந்த துறை, கடந்த ஜனவரி 27-ம் தேதி, உணவுத் துறை அமைச்சர் காமராஜிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்
வேளாண்மை துறையில் அதிகாரியாக இருந்த முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் சிக்கியதால் மார்ச் 7ஆம் தேதி, வேளாண் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டு, அத்துறை வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கத்திடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.

ஆளுநர் ரோசய்யா
இதுவரைக்கும் 21 முறை நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தை ஒரு சாதனை எனக் குறிப்பிட்டால், அதில் 18 முறை அமைச்சரவை மாற்றத்தை செய்துவைத்த பெருமை தற்போதைய ஆளுநர் ரோசய்யாவையேச் சேரும்.

தடுமாறாத அமைச்சர்கள்
எத்தகைய அரசியல் சுழலிலும் தங்களுடைய நிலையை காப்பாற்றிக் கொண்டு, அமைச்சர்களாக தொடர்பவர்கள் ஆட்சியின் நான்காண்டு நிறைவில் பாராட்டத்தக்கவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். அந்த வரிசையில் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், பழனிச்சாமி, பழனியப்பன், செல்லூர் ராஜு, செந்தில் பாலாஜி, சின்னையா, என்.சுப்ரமணியன், ஜெயபால் போன்றவர்கள் தொடக்கம் முதல் இன்றளவும் அமைச்சர்களாக தொடர்கிறார்கள்.

பால், மின்கட்டண உயர்வு
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த உடனே பால் விலை, பேருந்துக் கட்டணம், மின் கட்டணத்தை வரலாறு காணாத வகையில் உயர்த்தி அறிவித்தார். முதல்வராக பன்னீர் செல்வம் பொறுப்பேற்ற உடன் பால் விலையும் மின்கட்டணமும் உயர்த்தப்பட்டது மக்கள் மீது பெறும் சுமையாக விழுந்துள்ளது.

சாதனை என்ன?
அம்மா உணவகம் தொடங்கி அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட், அம்மா குடிநீர், அம்மா உப்பு வரை விற்பனை செய்வது அதிமுக அரசின் சாதனை என்று கூறப்படுகிறது.

7 பேர் விடுதலை தீர்மானம்
ஆனால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இதேபோல 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிமுக ஆட்சி மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்தியது.

காவிரி நதிநீர், முல்லைபெரியாறு
காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிகளாக உயர்த்த தடை இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது போன்றவை அதிமுக ஆட்சிகாலத்தில் அடைந்த வெற்றிகளாக கொண்டாடப்படுகிறது.

ஊழலோ ஊழல்
அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது என்று காங்கிரஸ், பாமக, மதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஆளுநரிடம் அளித்து வரும் நிலையில் அதிகாரிகளின் ஊழல் பட்டியலை போஸ்டர் வைத்து வெளிப்படுத்தி வருகின்றனர் சிலர். அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. கொலை,கொள்ளை அதிகரித்து விட்டது என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் குற்றம்சாட்டிவருகின்றனர்.

காவடியும் யாகங்களும்
முதல்வராக இருந்த ஜெயலலிதா மக்கள் முதல்வராக மாறியது முதல் அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் காவடியும் கையுமாகத்தான் இருக்கின்றனர். கோவில் கோவிலாக போகின்றனரே தவிர கோட்டைக்கு யாரும் சரியாக போனதாக தெரியவில்லை. இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், ஜெயலலிதாவின் விடுதலை மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

சாதனைகளும் சறுக்கல்களும்
அதிமுக ஆட்சியில் அமைச்சரவை மாற்றங்கள் குறித்து விமர்சனங்கள் இருந்தாலும், செயல்படாதவர்கள் மற்றும் புகாருக்கு உள்ளானவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்ற எச்சரிக்கை ஒவ்வொரு முறையும் விடுக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது. சத்தமில்லாமல் சாதனைகளோடு, சறுக்கல்களோடும் 4 ஆண்டுகளை கடந்துள்ளது அதிமுக ஆட்சி. மீண்டும் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்று ஓராண்டுகாலத்தை நிறைவு செய்வாரா? அல்லது பொதுத்தேர்தலை அறிவித்து மீண்டும் தனது பலத்தை நிரூபிப்பாரா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.












Click it and Unblock the Notifications