2 நாளில் 242 மி.மீ மழை.. வேகமாக நிரம்புகிறது செம்பரம்பாக்கம்.. அச்சத்தில் சென்னை!
சென்னை: சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் நான்கு முக்கிய நீர் நிலைகளிலும் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்தவண்ணம் உள்ளது. மழை மேலும் தொடர்ந்து வருவதால் நீர் மட்டம் இங்கு உயர்ந்தபடி உள்ளது.
குறிப்பாக மிகப் பெரிய நீர்த்தேக்கமான செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 2 நாட்களில் 242 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் இங்கு நீர்மட்டம் வேகமாக முழு அளவை நோக்கி நகர்ந்து வருகிறது. அதேபோல பூண்டி, சோழவரம், புழல் ஏரிகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
சோழவரம், பூண்டி, புழல் ஏரிகளுக்கும் நீர் வரத்து இன்று அதிகரித்துள்ளது #infographics #chennairains pic.twitter.com/IQU633kskW
— Oneindia Tamil (@thatsTamil) May 18, 2016
செம்பரம்பாக்கம் ஏரியின் முழுக் கொள்ளளவு 84.40 அடியாகும். இங்கு 3645 மெட்ரிக் கன அடி நீர் அளவுக்கு தேக்கி வைக்க முடியும். தற்போது இங்கு 2464 மெட்ரிக் கன அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது.
ஏரியின் நீர் மட்டம் 80.83 அடியை எட்டியுள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 1190 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. ஏரியிலிருந்து விநாடிக்கு 160 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது
செம்பரம்பாக்கம் பகுதியில் நேற்று 120 மில்லி மீட்டர் மழை பதிவானது. இன்று 122 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மொத்தமாக கடந்த 2 நாட்களில் மட்டும் 242 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத் தொடக்கத்தில் பெய்த பேய் மழையால் சென்னை ஸ்தம்பித்தது. துயரத்திற்கு மேல் துயரமாக அதன் உச்சமாக, செம்பரம்பாக்கம் ஏரியை இரவில் திறந்து விட்ட காரணத்தால் சென்னையை பெரு வெள்ளம் மூழ்கடித்தது. பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.
வேகமாக ஏரி நிரம்பி வருவதால் தற்போது மக்களின் ஒட்டுமொத்த கவனமும் செம்பரம்பாக்கம் பக்கம் திரும்பியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மாலை 7 மணி முதலே சாரல் மழை பெய்தது. நள்ளிரவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மாவட்டம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரி நிறையுமா, தண்ணீர் திறந்து விடப்படுமா என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். தற்போது அடையாற்றில் தண்ணீர் கணிசமான அளவில் ஓடிக் கொண்டிருப்பதால் வெள்ளப் பெருக்கு அச்சத்தில்
மக்கள் உள்ளனர்.
மற்ற ஏரிகளும் நிரம்புகின்றன
இதேபோல சோழவரம், பூண்டி, புழல் ஏரிகளுக்கும் நீர் வரத்து இன்று அதிகரித்துள்ளது.
பூண்டி நீர்த்தேக்கத்திற்கு விநாடிக்கு 213 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. நீர்த்தேக்கத்திலிருந்து 39 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இங்கு இன்று 82.7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இங்கு மொத்த நீர் மட்டம் 140 அடியாகும். இதில் தற்போது நீர் மட்டம் 130.50 அடியாக உள்ளது.
சோழவரம் ஏரியில் இன்று 114 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அங்கு நீர் வரத்து விநாடிக்கு 91 கன அடியாக உள்ளது. விநாடிக்கு 10 கன அடி நீர் வெளியேறி வருகிறது. ஏரியின் முழுக் கொள்ளளவு 64.50 அடியாகும். தற்போது நீர் மட்டம் 48.11 அடியாக உள்ளது.
புழல் ஏரியின் முழுக் கொள்ளளவு 50.20 அடியாகும். தற்போது நீர் மட்டம் 42.07 அடியாக உள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 786 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. ஏரியிலிருந்து விநாடிக்கு 173 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளிலும் தற்போது மொத்தமாக 5196 மெட்ரிக் கன அடி நீர் இருப்பு உள்ளது. மொத்த கொள்ளளவு 11,057 மெட்ரிக் கன அடியாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நீர் இருப்பு வெறும் 1971 மெட்ரிக் கன அடியாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
புறநகர்களில் நல்ல மழை
சென்னையிலும், புறநகர்களிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் இணயைதளமும் கூறியுள்ளது.
சென்னை புறநகர்களில் நல்ல மழை #chennairains https://t.co/RCpptI7hh5 pic.twitter.com/JioiimrOgg
— Oneindia Tamil (@thatsTamil) May 18, 2016
சத்யபாமா பல்கலைக்கழகப் பகுதியில் கடந்த 2 நாட்களில் 210 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதேபோல காட்டாங்கொளத்தூர் பகுதியில் கடந்த 2 நாட்களில் 200 மில்லி மீட்டர் மழை கொட்டியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகப் பகுதியில் 190, சென்னை நகரில் 182, விமான நிலையப் பகுதியில் 181, தரமணியில் 174, திருப்போரூரில் 167 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக அது கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications