”இழுத்து மூடுங்கள் டாஸ்மாக்கை” அட்லீஸ்ட் சென்னையிலாவது- தீயாய் பரவும் கோரிக்கை!
சென்னை: வெள்ளத்தால் தலைநகரமே சீர்குலைந்து அத்தியாவசிய பொருட்களுக்காக அடித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் விற்பனை மட்டும் குறைந்த பாடில்லை.
இந்நிலையில் "இழுத்து மூடுங்கள் டாஸ்மாக்கினை" (close tasmac) என்கின்ற ஹேஷ் டேக் சமூக வலைதளமான பேஸ்புக்கில் படுவேகமாக பரவி வருகின்றது.
கால் வரை மறைக்கும் வெள்ள நீரில் நின்று கொண்டு குழந்தை ஒன்று கையில் தட்டேந்தி, உணவுடன் நின்று கொண்டிருக்கும் பரிதாப காட்சியுடன் இச்செய்தி வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.

டாஸ்மாக் மூடுவோம்: (பேஸ்புக் பதிவு)
ஒருபக்கம், உலகெங்குமிருந்து மனிதாபிமான உள்ளங்கள் அளித்த நிதியுதவியைக் கொண்டு தன்னார்வலர்கள் தமது சொந்த வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். மழையிலும் வெள்ளத்திலும் உண்ணாமல் உறங்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

விரக்தியில் தன்னார்வ தொண்டர்கள்:
மற்றொரு பக்கம், டாஸ்மாக் குடிமகன்கள் இவர்களைத் தாக்குகிறார்கள். நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்பவர்களை, "உங்களால்தானே எங்கள் அம்மாவுக்குக் கெட்ட பெயர்" என்று கூறி அடித்திருக்கிறார்கள். நேற்றும் நடந்தது. தன்னார்வலத் தொண்டர்கள் விரக்தி அடைந்திருக்கிறார்கள். மேலும் பணியில் இறங்க அஞ்சுகிறார்கள். இதற்கு மேலும் இதைப்பற்றி விளக்க விரும்பவில்லை.

பறிக்கப்படும் பொருட்கள்:
பலவகையான சிரமங்களையும் தாங்கி நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்றாலும் உரியவர்களுக்கு சேர்ப்பிக்க முடிவதில்லை. நடுவே பறித்துக் கொள்கிறார்கள். விநியோகம் செய்யப்படும் நிவாரணப் பொருட்களும் குடிகாரர்கள் கையில் சிக்கி, டாஸ்மாக் பக்கம் போகக்கூடும்.

மீண்டு வரும் காலம்:
எல்லா உடைமைகளையும் இழந்த பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வர இன்னும் 6 மாதங்கள் ஆகலாம். அதற்கு மேலும் ஆகலாம். உணவு, உடை, இருப்பிடம், கல்வி, புத்தகங்கள், அடையாள அட்டைகள் என எல்லாமே புதிதாகத் துவங்க வேண்டிய நிலையில் லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள்.

மூடியே தீர வேண்டும்:
ஆகவே, வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டுமாவது குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அரசு உத்தரவிட வேண்டும். குழந்தைகள் நலன் முக்கியமா, குடிகாரர்கள் மகிழ்ச்சி முக்கியமா?

அரசுக்கு நிர்ப்பந்தம்:
நீதிமன்றத்தை அணுகுவதால் பிரச்சினை தீராது. மக்களின் நிர்ப்பந்தம் மட்டுமே இதைச் செய்ய முடியும். எல்லாத் தரப்பிலிருந்தும் அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுப்போம். ஊடகங்களின் கவனத்துக்குக் கொண்டு செல்வோம்" என்று பதிவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications