தமிழகத்தில் ரூ.1 லட்சம் கோடி இழப்பீடு ஏற்படுத்திய பெருவெள்ளம்…. 2015ம் ஆண்டின் பேரழிவு
சென்னை: சந்தோஷமான நினைவுகளை அசைபோடலாம்... அது மனதிற்கு உற்சாகத்தைத் தரும் ஆனால் சோகமான சம்பவங்களையும், மிகப்பெரிய பேரழிவையும், பெரு நஷ்டத்தையும் நஷ்டத்தையும் ஏற்படுத்திய சம்பவங்களை திரும்ப நினைவுபடுத்துவது என்பது மீண்டும் மீண்டும் சோகத்தை அதிகரிக்கச் செய்யும்.
2015ம் ஆண்டின் இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் மாவட்ட மக்களை பெரும் சோகத்திற்கு ஆழ்த்திய நிகழ்வு என்றால் பெருமழையும், அதை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளமும்தான். பல லட்சம் மக்கள் உடமைகளை பறிகொடுத்து விட்டு ஒரே நாள் இரவில் தெருவிற்கு வர காரணமாக அமைந்து விட்டது மழை வெள்ளம். இது சென்னைவாழ் மக்களின் மிகப்பெரிய துயர சம்பவம் என்றே கூறவேண்டும்.
தமிழகத்தில், 100 ஆண்டுகளுக்கு இல்லாத அளவு மழை கொட்டித் தீர்த்ததால், சென்னை மற்றும் புறநகரில், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா பொருளாதத்திற்கு கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர் அளவிற்கு அதாவது இந்திய ரூபாயில் 19,89,89,8,50,000.00 அளவிற்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாம்.
தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலுார் மாவட்டங்களில், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கன மழையால், பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், தொழில் துறையிலும் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இது, நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என, பிரிட்டனைச் சேர்ந்த மறுகாப்பீட்டு நிறுவனமான ஆன் பென்பீல்டு தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத மழை வெள்ளம்
உலக அளவில் நடந்த பேரிடர்களில், சென்னை, இலங்கையில் நிகழ்ந்த பாதிப்பு, எட்டாம் இடத்தை பிடித்துள்ளது. இது தொடர்பாக ஆன் பென்பீல்டு வெளியிட்ட அறிக்கையில், வடகிழக்குப் பருவமழை மற்றும் எல் நினோ இணைந்த விளைவால் தமிழகம், ஆந்திரா மற்றும் இலங்கையில் அதிகமழை பெய்துள்ளது.

ரூ. 1லட்சம் கோடி இழப்பீடு
நவம்பர் முதல் டிசம்பர் வரை நீடித்த மழையால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளத்தால் தமிழகத்துக்கு மட்டும் ரூ. 1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஐ.டி துறை, ஆட்டோமொபைல் துறை, சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களும் சென்னை வெள்ளத்தின் முன் நடுங்கித்தான் போயுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.

ரூ.2000 கோடி இழப்பீடு
இழப்பீடு கேட்டு வரும் விண்ணப்பங்கள் 2 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் கூறியுள்ளதாகவும் ஆன் பென் பீல்ட் நிறுவனம் கூறியுள்ளது.

இந்திய பொருளாரத்திற்கு 3 பில்லியன் டாலர் இழப்பு
சென்னை வெள்ளம் தமிழகத்தை மட்டும் பாதிக்கவில்லை. இந்திய பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது என்றே கூறவேண்டும். உலகப் பேரழிவு தொடர்பாக மாதந்தோறும் அந்நிறுவனம் வெளியிடும் அறிக்கையில் சென்னை வெள்ளத்தால் இந்தியப் பொருளாதாரத்திற்கு 3 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.

சென்னை வெள்ளச்சேதம்
இந்த ஆண்டில் அக்டோபரில் அமெரிக்காவின் தென்கிழக்கில் ஏற்பட்ட வெள்ளமும் ஜூன் மாதம் சீனாவில் நிகழ்ந்த வெள்ளமும் அந்நாடுகளில் 2 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தி இருந்தன. அதுவே ஆகப் பெரிய இழப்பாகக் கணக்கிடப்பட்ட நிலையில் சென்னை வெள்ளச் சேதம் இதனைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

உலக அளவில் பேரிடர்கள்
பருவநிலை மாற்றம் மற்றும், 'எல் நினோ' விளைவு காரணமாக, உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆண்டு, பெரிய அளவிலான இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்துள்ளன; இதனால், பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

எல்நினோவும் இயற்கை பேரிடர்களும்
எல் நினோ விளைவால், உலகின் பல இடங்களில் இயற்கை பேரிடர்கள் நடந்த வண்ணம் உள்ளன. இந்த ஆண்டு துவக்கத்தில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால், 94 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பொருளாதார இழப்பு ஏற்பட்டது.

மழை வெள்ளத்தால் இழப்பு
கடந்த ஜூன் மாதம் சீனாவில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால், 13 ஆயிரம் கோடி ரூபாயும், அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால், 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது.

உலக அளவில் அதிக இழப்பு
தற்போது, சென்னை மற்றும் இலங்கையில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பால், 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பொருளாதார இழப்பு ஏற்படும். இதுவே, உலக அளவில், இந்த ஆண்டு மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார இழப்பாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications