சென்னை - நெல்லை சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் வரவேற்பு: ஆனால் கட்டணம் தான் ரூ. 4,400
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் கட்டணம் தான் அதிகமாக இருப்பதாக பயணிகள் வருத்தம் தெரிவித்தனர்.
பண்டிகை காலங்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கான அனைத்து ரயில்களிலும் இடங்கள் நிரம்பி விட்டன. தெற்கு ரயில்வே அறிவித்துள்ள சிறப்பு ரயில்களிலும் இடங்கள் இல்லாததால் ‘சுவிதா' என்னும் பிரிமீயம் ரயிலில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

பிரிமீயம் சுவிதா ரயிலில் காலியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப கட்டணம் உயர்ந்து கொண்டே செல்லும். முதலில் முன்பதிவு செய்யும் போது கட்டணம் குறைவாக இருக்கும்.
தொடர்ந்து இடங்கள் நிரம்ப நிரம்ப மீதமுள்ள காலி இடங்களுக்கு கட்டணம் பலமடங்கு அதிகரித்து கொண்டே செல்லும். அந்த அடிப்படையில் பொங்கல் பண்டிகை காலத்தில் அதாவது ஜனவரி 17-ந் தேதி நெல்லையில் இருந்து சென்னை வருவதற்கு 2-ம் வகுப்பு ஏ.சி. படுக்கை வசதி கட்டணம் சுவிதா ரயிலில் ரூ.4,400 ஆகும்.
இந்த டிக்கெட் விமான கட்டணத்தை விட உயர்வாகும். தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 16-ந் தேதி பயணம் செய்ய விமான கட்டணம் ரூ.3,623 வசூலிக்கப்படுகிறது. இதே போல சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சுவிதா சிறப்பு ரயிலில் 14-ந் தேதி கோவைக்கு செல்ல 2-ம் வகுப்பு ஏ.சி. கட்டணம் ரூ.2,285.
ஆனால் விமானத்தில் செல்ல குறைந்த பட்ச கட்டணம் ரூ.1,871 ஆகும். ரயில் டிக்கெட்டை ஒப்பிடும்போது விமான கட்டணம் ரூ.400 குறைவாக உள்ளது. அதே நேரத்தில் சேரன் எக்ஸ்பிரசில் முதல் வகுப்பு ஏ.சி. கட்டணம் ரூ.1,930 நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவிதா சிறப்பு ரயிலில் 2-ம் வகுப்பு படுக்கை கட்டணம் சாதாரண ரெயில் கட்டணத்தை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வழக்கமான ரயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை கட்டணம் ரூ.385. சுவிதா சிறப்பு ரயிலில் ரூ.1,315 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கூட்ட நேரங்களில் அவ்வப்போது சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறவித்தாலும் அதில் ஒரு லாப நோக்கம் இருப்பதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications