திருப்பதி உண்டியல் காணிக்கை சர்ச்சை... விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குப் பதிவு!
நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது பிற மதத்தைபுண்படுத்தும் வகையில் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது பிற மதத்தைபுண்படுத்தும் வகையில் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதத்தில் பாடல் இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவது சாமிக்கு லஞ்சம் கொடுப்பது போன்றது என்று பேசி இருந்தார். சாமிக்கு காணிக்கை கொடுத்தால் தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம் என்றால் யாரும் தேர்வுக்கு போக வேண்டாம், உண்டியலில் காணிக்கை போட்டுவிட்டு வீட்டிலேயே உட்கார்ந்து இருக்கலாம் என்று பேசி இருந்தார்.
எஸ்.ஏ.சந்திரசேகரின் பேச்சை குறிப்பிட்டு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இன்று தனக்கு ஜாதி இல்லை மதம் இல்லை நாங்கள் தமிழர்கள் மனிதர்கள் என்கிற கிறித்தவ மதமாற்றும் சக்திகளின் கோரமுகம் இதோ.

எச். ராஜாவின் விஷம டுவீட்
நாம் ஏழுமலையானுக்கு செலுத்தும் காணிக்கை லஞ்சமாம். இந்துக்களே இனியும் நாம் ஏமாறப் போகிறோமா?ரசிகர் மன்றம் கலைப்போம் இந்துவாக இணைவோம் என்று டுவீட் போட்டிருந்தார்.

ஹைகோர்ட்டில் வழக்கு
இந்நிலையில் இந்து மக்கள் முன்னணி நிர்வாகி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் இந்த மக்களின் மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் மீது புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

ஹைகோர்ட் உத்தரவு
எனவே எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிய உத்தரவிடுமாறு மனுதாரர் நாராயணன் கோரி இருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ரமேஷ் இயக்குனர் சந்திரசேகர் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியுமாறு உத்தரவிட்டிருந்தார்.

வழக்குப் பதிவு
இந்நிலையில் விருகம்பாக்கம் போலீசார் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது பிறமதத்தை புண்படுத்தும் வகையில் பேசியதாக வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். எஸ்.எ.சந்திரசேகர் மீது ஜாமினில் வெளிவரும் பிரிவ்னி கீழ் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications