கள்ளக்குறிச்சியில் மீட்கப்பட்ட பெண் சென்னையில் மரணம்.. பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார்!
சென்னை: சென்னையில் காணாமல் போன பெண் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் மயங்கி நிலையில் மீட்கப்பட்டார். அவரை சென்னை கொண்டு வந்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். ஆனால் அவர் நேற்று மரணமடைந்தார். அவரை பலர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால்தான் மரணமடைந்துள்ளார் என்று உறவினர்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வால்டாக்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான ஜெயஸ்ரீ. இவர் அப்பகுதியில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் நவம்பர் 24ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து எழுகிணறு போலீஸ் நிலையத்தில் ஜெயஸ்ரீயின் சித்தி காந்தா என்பவர் புகார் கொடுதி்திருந்தார். அதில் தனது அக்காளை பஸ்சில் ஏற்றி விடுவதற்காக கோயம்பேடு பஸ் நிலையம் சென்ற ஜெயஸ்ரீ அதன் பிறகு காணவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் டிசம்பர் 3ம் தேதி ஜெயஸ்ரீ வேலை பார்த்து கடைக்கு பக்கத்துக் கடையில் வேலை பார்க்கும் ஒருவர் போலீஸாருக்குப் போன் செய்து, ஜெயஸ்ரீ கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் மயங்கிய நிலையில் இருப்பதாக தகவல் கொடுத்தார். இதையடுத்து கள்ளக்குறிச்சி போலீஸாரை உஷார்படுத்தினர் ஏழுகிணறு போலீஸார். பின்னர் இங்கிருந்து ஒரு படை கள்ளக்குறிச்சி விரைந்தது.
ஜெயஸ்ரீயை மீட்ட போலீஸார் அவரை சென்னை கொண்டு வந்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உடல்நிலை மோசமடைந்து நேற்று ஜெயஸ்ரீ மரணமடைந்தார்.
இதையடுத்து ஜெயஸ்ரீ குடும்பத்தினர், உறவினர்கள் வால்டாக்ஸ் சாலையில் போராட்டத்தில் குதித்தனர். ஜெயஸ்ரீ பலரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மிகவும் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டதால்தான் அவர் மரணமடைந்துள்ளார். குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும், மேலும் ஜெயஸ்ரீ மயங்கிக் கிடப்பதாக தகவல் சொன்னவரைப் பிடித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று போராட்டத்தில் குதித்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்ததும் அதன் அடிப்படையில் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் உறுதியளித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications