இயேசு பிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை... கிறிஸ்தவர்கள் உற்சாக கொண்டாட்டம்... தலைவர்கள் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் திருநாளை கிறிஸ்தவர்கள் இன்று உற்சாக கொண்டாடி வருகின்றனர். தமிழக அரசியல் தலைவர்களும் கிறிஸ்தவ மக்களுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்தவர்களின் 40 நாள்கள் தவக்காலத்திற்குப் பின்னர் வருவது பண்டிகை ஈஸ்டர் பண்டிகையாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்ட பின்னர் மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுந்ததைக் கொண்டாடும் நிகழ்வாக ஈஸ்டர் பண்டிகை உள்ளது.

இப்பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சனிக்கிழமை நள்ளிரவில் திருப்பலிகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இவற்றில் மக்கள் புத்தாடை அணிந்து கையில் மெழுகு வர்த்தி ஏந்தியவாறு உற்சாகமாக பங்கேற்றனர். திருப்பலியில் பங்கேற்ற இறைமக்கள் தங்களின் திருமுழுக்கை புதுப்பித்துக் கொண்டனர். திருப்பலி மற்றும் ஆராதனைகள் முடிந்த பிறகு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

Christians across the country mark Easter with religious pageantry

இந்நிலையில், ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடி வரும் கிறிஸ்தவ மக்களுக்கு தமிழக அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி வாழ்த்து :

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

பகைவர் இழைத்த துன்பங்களில் இருந்து விடுதலை பெற்று இயேசு மீண்டெழுந்தார் எனக்கூறி, அந்நாளை கிறிஸ்தவ சமுதாயத்தினர், "ஈஸ்டர்"எனும் திருநாளாகக் கடைபிடித்து வருகின்றனர். இந்த ஆண்டின் ஈஸ்டர் திருநாளை 5-ந்தேதி (இன்று) சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்திடும் கிறிஸ்துவ சமுதாயமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

1989-ம் ஆண்டில் மாநில சிறுபான்மையினர் நல ஆணையம் அமைத்து கிறிஸ்தவ உள்ளிட்ட சிறுபான்மையினர் நலம் பெறச்செய்தது தி.மு.க. ஆட்சி. சிறுபான்மையினரின் சமூக, பொருளாதார, கல்வி முன்னேற்றத்தில் தனிக்கவனம் செலுத்திட வேண்டும் என்பதற்காக சிறுபான்மையினர் நல இயக்ககம் ஒன்றை 6.4.2007 அன்று தோற்றுவித்தது தி.மு.க. ஆட்சி.

அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த மதமாற்றத்தடை சட்டத்தை ரத்து செய்தது தி.மு.க. ஆட்சி. சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுகட்டிடத்திற்கு "அன்னை தெரசா மாளிகை" எனப் பெயர் சூட்டி 1.11.2010 அன்று திறந்து வைத்தது தி.மு.க. ஆட்சி. இப்படி தி.மு.க. ஆட்சி அமையும் போதெல்லாம் கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கு சலுகைகள் பல வழங்கி; என்றும் அவர்களுடன் நல்லுறவு பேணி; கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கு துணை புரிந்து வருவது தி.மு.க. என்பதனை நினைவுபடுத்தி, இந்நன்னாளில் கிறித்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைமீண்டும் தெரிவித்து மகிழ்கிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் வாழ்த்து :

தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

ஏழைகளுக்கு இரக்கம் காட்டி, எதிரிகளுக்கும் அருள் செய்ய வேண்டும், பாமரர்களுக்கும் அன்பு காட்டி உதவி செய்திட வேண்டுமென மனித குலத்தை வாழ்விக்க இறைத்தூதர் இயேசு நாதர் அளித்த போதனைகள் சிறப்பானதாகும்.

உலகில் அமைதி நிலவ, மனிதநேயம் தழைக்க ஈஸ்டர் திருநாள் ஒரு இன்பத்திருநாளாக மலரட்டும். ஏழைகளுக்கு செய்யும் தொண்டு, இறைவனுக்கு செய்யும் தொண்டாகும். இந்நாளில் கிறிஸ்தவ சமுதாயத்தை சார்ந்த அனைத்து மக்களுக்கும், தே.மு.தி.க. சார்பில் எனது இதய மார்ந்த ஈஸ்டர் திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்' என இவ்வாறு தனது வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளார்.

ராமதாஸ் வாழ்த்து :

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

உலகை இரட்சிக்க வந்தவரான இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இயேசுபிரானின் உயிர்த்தெழுதல் பண்டிகையை கொண்டாடுகிற இந்த நேரத்தில் அவரை பின்பற்றி மற்றவர்கள் மீது அன்பு செலுத்தவும், மற்றவர்களை மன்னிக்கவும் கற்றுக்கொள்வோம். பசித்தவர்களுக்கு உணவு அளிக்க முன் வருவோம். ஏழைகளை நேசிப்போம். மற்றவர்களின் குற்றங்களை மன்னித்து அனைவரிடமும் அன்பு செலுத்தி அன்புள்ளவர்களாக வாழ உறுதியேற்போம்' என்றார்.

சரத்குமார் வாழ்த்து :

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

அன்பும், சகோதரத்துவமும், மனிதநேயமும், சக மனிதர்களிடையே நிலை பெற்று நின்று, பூமி எங்கும் சமாதானம் தழைத்தோங்கும் விதமாக இந்த ஈஸ்டர் திருநாள் அமைந்திட நாம் அனைவரும் பிரார்த்திப்போம். விரதம் முடிந்து ஈஸ்டர் திருநாளை கொண்டாடும் கிறிஸ்தவ சொந்தங்களுக்கு என் அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜி.கே.வாசன் வாழ்த்து :

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

நம் நாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக கல்வித்துறையிலும், மருத்துவத்துறையிலும் ஏழை, எளிய, அடித்தட்டு மக்களுக்கு தொண்டாற்ற தொண்டு நிறுவனங்களை நிறுவி, சிறப்பாக சேவை செய்து வருவது மிகுந்த பாராட்டுக்குறியது.

கிறிஸ்தவ சமுதாய மக்கள் பணி தொடரவும், வளரவும், அவர்களது வாழ்வு செழிக்கவும், அவர்கள் ஒற்றுமையாகவும், பாதுகாப்புடனும், அமைதியாகவும் வாழ ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இளங்கோவன் வாழ்த்து :

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

ஈஸ்டர் நன்னாளில் நாட்டின் மத, இன, மொழி, வேறுபாடுகள் மறந்து பகைவர்களுக்கும் அருளும் பண்பு மனிதர்களிடையே மிளிர்ந்து அனைவரும் அமைதி, சமாதானத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நெஞ்சில் ஏற்போம். சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, வளமான வாழ்வை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம். அனைத்து கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஈஸ்டர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

என்.ஆர்.தனபாலன் வாழ்த்து :

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘இயேசுநாதர் உயிர்தெழுந்த இந்த நல்ல நாளில் தேவன் நமக்கு பரலோக ராஜியத்தை நிச்சயப்படுத்தி வைத்திருக்கின்றான். நாம் யாவரும் இந்த நல்ல நாளில் அவருடைய அன்பையும், தாழ்மையையும் கற்றுக்கொள்வோம். அனைவருக்கும் என் உளங்கனிந்த ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏ.சி.சண்முகம் வாழ்த்து :

புதிய நீதிக்கட்சி நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘மதசார்பற்ற நம் நாட்டில் வாழும் கிறிஸ்தவ மக்களும், இந்துக்களும் இந்த நாளை ஒற்றுமையுடன் கொண்டாடி வருகின்றனர். இது வேற்றுமையில் ஒற்றுமை எனும் உயரிய கொள்கையின் வெளிப்பாடாகும். அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

எச்.வசந்தகுமார் வாழ்த்து :

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் எச்.வசந்தகுமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘உலகம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக, அன்பையும், அமைதியையும், சகோதரத்துவத்தையும் போதித்த இயேசு கிறிஸ்து காட்டிய நல்வழியில் நடக்க ஈஸ்டர் நாளில் உறுதியேற்போம்' என்று கூறியுள்ளார்.

கொங்குநாடு ஜனநாயக கட்சி தலைவர் ஜி.கே.நாகராஜ், கிறிஸ்தவ முன்னேற்ற கழக தலைவர் ஜோசப் பெர்னாண்டோ, அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் மத்தியாஸ் என்ற சீனிவாசன், இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநிலத்தலைவர் ஓய்.ஜவஹர்அலி, கோகுல மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் எம்.வி.சேகர் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+