பிரபல நடிகர் சுதாகர் ஞாபகமிருக்கா.. "மாஞ்சோலை கிளிதானோ".. டென்ஷனில் மக்கள்.. வந்தது வீடியோ..அப்பாடா
சென்னை: பிரபல நடிகர் சுதாகர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.. அந்த வீடியோவை பார்த்தபிறகுதான், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகமும், ரசிகர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.. என்ன நடந்தது?
பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் சுதாகர்.. சுருள் சுருள் முடி, வசீகரமான முகம், வித்தியாசமான ஹேர்ஸ்டைல், குட்டி மூக்கு, கட்டுமஸ்தான உடல் என தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் சுதாகர்..
பாரதிராஜா இயக்கிய 'கிழக்கே போகும் ரயில்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சுதாகர்.. பரஞ்சோதி என்ற கேரக்டரில் நடித்திருந்த சுதாகருக்கு, அந்த படத்திலேயே ரசிகர் பட்டாளம் உருவானது.. அடுத்தடுத்த படங்களால், குறுகிய காலத்திலேயே உச்சத்துக்கு சென்றவர்.. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் பிஸியான நடிகராகவே வலம்வந்து கொண்டிருந்தார்.
மயக்கிய இளையராஜா:
கிழக்கே போகும் ரயிலை அடுத்து 'கல்லுக்குள் ஈரம்', 'சுவரில்லாத சித்திரங்கள்', 'நிறம் மாறாத பூக்கள்', 'மாந்தோப்பு கிளியே', 'எங்க ஊரு ராசாத்தி', 'பொண்ணு ஊருக்கு புதுசு', 'கரும்பு வில்', 'கரை கடந்த ஒருத்தி', 'தைப்பொங்கல்' உட்பட பல படங்களில் நடித்தார்...

இந்த படங்களில் எல்லாம் சுதாகருக்கு, இளையராஜா இசையில், லட்டு லட்டாய் பாடல்கள் அமைந்தன.. கோவில் மணி ஓசைதனை கேட்டதாரோ, மாஞ்சோலை கிளிதானோ, பூவரசம்பூ பூத்தாச்சு, மலர்களே நாதஸ்வரங்கள், ஆயிரம் மலர்களே மலருங்கள், பொன்மானை தேடி, என இனிமையான பாடல்களான இப்போதுவரை தமிழக ரசிகர்களின் காதல் ஒலித்து கொண்டே இருக்கின்றன.. இந்த பாடல்களை கேட்கும்போதெல்லாம், சுதாகரனின் நினைவும் தமிழக மக்களுக்கு மறக்காமல் வந்து போய் கொண்டே இருக்கின்றன..
ஹைதராபாத்:
என்ன காரணமோ தெரியவில்லை.. 80களின் இறுதியில் தமிழ் படங்களில் நடிக்காமல் சுதாகர் ஒதுங்கிவிட்டார்.. சில வருடங்கள் கழித்து, ரஜினியுடன் 'அதிசயப் பிறவி' படத்தில் மட்டும் நடித்திருந்தார்.. ஆனால், தெலுங்கு படங்களில் காமெடி மற்றும் கேரக்டர் ரோல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.. ஹைதராபாத்திலேயே செட்டில் ஆகியும் விட்டார்.. தமிழ் மற்றும் தெலுங்கில் மட்டும் சுமார் 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் சுதாகர் உடல்நிலை குறித்து தெலுங்கு இணையதளங்களில் திடீர் வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது... இதைப்பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமும், பதறிப்போயின.. இதனால், சுதாகர் குடும்பத்தினரை நேரடியாகவே தொடர்பு கொண்டு விசாரிக்க தொடங்கினர். அப்போதுதான், பரவி வருவது வதந்தி என தெரியவந்தது.. இதனால், ரசிகர்களுக்கும் இதை தெளிவுபடுத்த விரும்பினார் சுதாகர்.. இதற்காகவே, வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் விளக்கமும் தந்திருந்தார்.
விளக்கம்:
இப்போது நடிகர் சுதாகருக்கு 64 வயதாகிறது.. ஏற்கனவே இவருக்கு உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது இவர் உடல்நலம் தேற வேண்டும் என்று ரசிகர்களும் பிரார்த்தனை செய்தவாறே இருந்தனர்.. அதனால்தான், இப்போது இவரது உடல்நிலை குறித்து வதந்திகள் திடீரென பரவியது..
அந்த வீடியோவில், அனைவருக்கும் வணக்கம், என்னைப் பற்றி நீங்கள் அனைவரும் படிக்கும் தகவல் தவறானது. நான் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். தயவு செய்து பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம். எதையும் உண்மை தெரியாமல் பகிரவோ, மற்றவர்களுக்கு அனுப்பவோ வேண்டாம்.. நான் உயிருடன் இருக்கிறேன். நன்றாக இருக்கிறேன். கவலைப்பட எதுவும் இல்லை என்று சுதாகர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு பிறகுதான் ரசிகர்கள் நிம்மதியாயினர்.












Click it and Unblock the Notifications