முதல் 3 இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள், ரொக்கப்பரிசு கொடுத்து ஜெ. வாழ்த்து
மாநில அளவில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கி முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவிகள் அனை வருக்கும் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001- 2002ஆம் ஆண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது.
பின்பு, 2005-2006ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ, மாணவியருக்கும் இத்திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர்.

மாணவிகளுக்கு மிதிவண்டி
நடப்பு கல்வியாண்டில் 212 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் 2,86,328 மாணவர்கள் மற்றும் 3,57,539 மாணவிகள் என மொத்தம் 6,43,867 மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் முகமாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 7 மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தினார்கள்.
மிதிவண்டிகளைப் பெற்றுக் கொண்ட மாணவ, மாணவிகள் சிரமமின்றி பள்ளிக்கு சென்று வர மிதி வண்டிகளை வழங்கிய முதல்வருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
ரொக்கப்பரிசு
மாநில அளவில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் ரொக்கப் பரிசுகள் வழங்கும் திட்டமும் இதில் ஒன்றாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் மாநில அளவில் 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு முறையே 25 ஆயிரம் ரூபாய், 20 ஆயிரம் ரூபாய் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் என்ற வீதத்திலும், 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு முறையே 50 ஆயிரம் ரூபாய், 30 ஆயிரம் ரூபாய் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் என்ற வீதத்திலும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான் மையினர் வகுப்பைச் சேர்ந்தவர்களில் ஒவ்வொரு பிரிவிலும் மாணவர்களுக்குத் தனியாகவும், மாணவியருக்குத் தனியாகவும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, 2013ஆம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 80 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு 14 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கான ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகிறது. இவர்களில் 7 மாணவ, மாணவியருக்கு ரொக்கப்பரிசுகளை முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கி வாழ்த்தினார் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications