பொங்கல் பரிசு தொகுப்புக்கு டெண்டர் கொடுத்தாச்சு! ரைட்டு! அப்போ ரூ 1000 ரொக்கம்? இன்று அறிவிப்பு?
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி ரூ 1000 ரொக்கம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழர் திருநாளாம் அறுவடை திருநாள் தை முதல் நாள் பொங்கல் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு உள்ளிட்ட 21 பரிசுகளுடன் ரூ 1000 ரொக்கம் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டு பொங்கல் வருவதற்கு 10 நாட்களே உள்ள நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. புதுச்சேரி அரசு கூட சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ 1000 அறிவித்துவிட்டது.
இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகை கொடுப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஜனவரி 10-ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என தெரிகிறது. இதற்கான அறிவிப்பு எப்போது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பை தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்டது. அதாவது பொங்கல் பரிசு தொகுப்பிற்குத் தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்யத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநரின் கடிதங்களில், எதிர்வரும் 2024ஆம் ஆண்டிற்கான, பொங்கல் பரிசுத் தொகுப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்கி 31.10.2023 அன்றைய தேதி நிலவரப்படி, 2,19,57,402 எண்ணிக்கையிலான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிடும் பட்சத்தில் தோராயமாக ரூ.238,92 கோடி செலவினம் ஏற்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரூ 1000 வழங்கப்படுவது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இது குறித்து நேற்று வெளியான அரசாணையில் எதுவும் இல்லை. எனினும் இன்றைய தினம் ரூ 1000 ரொக்கம், வேட்டி, புடவை குறித்த அறிவிப்பையும் முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications