புதுவையில் திமுக-காங். கூட்டணி ஆட்சியே... அத்தனை எக்ஸிட்போலும் அடித்து சொல்லுது!
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணியே அதிக இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று வாக்குப் பதிவுக்குப் பிந்தைய அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவித்துள்ளன.
புதுச்சேரியின் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 84.1% வாக்குகள் பதிவாகி இருந்தன.
இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்துமே புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியை அமைக்கும் என்கின்றன.

இந்தியா டுடே- ஆக்சிஸ்
இந்தியாடுடே- மை ஆக்சிஸ் எக்ஸிட்போல் முடிவுகளின்படி திமுக- காங்கிரஸ் கூட்டணி 15 முதல் 21 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றும்; ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் 8-10 இடங்கள்; அதிமுக 1-4 இடங்களில் வெல்லும் என்கிறது.

இண்டியா டிவி
இண்டியா டிவி போல், திமுக- காங்கிரஸ் கூட்டணி 10-18 இடங்கள்; ஆளும் என்.ஆர். காங்கிரஸ் 5-13; அதிமுக 1-9; பாஜக 0-2; இதர கட்சிகள் 0-4 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

சிவோட்டர்
சிவோட்டரைப் பொறுத்தவரையில் திமுக- காங்கிரஸ் 14; என்.ஆர். காங்கிரஸ்- 9; அதிமுக- 5; இதர கட்சிகள் 2 இடங்களைக் கைப்பற்றும் என்கிறது. அதாவது திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு 34.3%; என்.ஆர். காங்கிரஸ்- 28.2%; அதிமுக 13.6%; பாஜக 8.1% வாக்குகளைப் பெறும் என்கிறது சிவோட்டர்.

அனைத்துமே
புதுச்சேரி எக்ஸிட்போல் முடிவுகள் அனைத்துமே இம்மாநிலத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன. இதனால் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுப்பது உறுதியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications