மழை ஓய்ந்தாலும் சென்னையை வதைக்க காத்திருக்கும் டெங்கு!
சென்னை: போதும்டா சாமி.. தாங்காதுடா பூமி என்று சென்னை மக்களை பயமுறுத்தி விட்டு ஓய்ந்துள்ள மழை தற்போது ஆந்திராவுக்குப் போய் விட்டாலும் கூட சென்னை மக்களை வாட்டி வதைக்க அடுத்த அச்சுறுத்தல் ஆயத்தமாகி வருகிறது. அதுதான் டெங்கு போன்ற அபாயகரமான நோய்கள்.
சென்னையும் அதன் புறநகர்ப் பகுதிகளும் மழையில் நனைந்து நடுங்கிப் போய் தற்போதுதான் சற்று ஆசுவாசமாகியுள்ளன. மழை விட்டது மக்களை சற்று நிம்மதிக்குள்ளாக்கியுள்ளது.
அதேசமயம், இனிமேல்தான் மக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டியுள்ளது. மழைக்குப் பின்னர் பரவும் நோய்களை நினைத்து முன்னெச்சரிக்கையுடன் மக்கள் இருக்க வேண்டியுள்ளது.

தேங்கிக் கிடக்கும் நீர்
நகரின் சில பகுதிகளில் மழை நீர் வடிந்து விட்டாலும் கூட பல பகுதிகளிலும், பெரும்பாலான புறநகர்ப் பகுதிகளிலும் மழை நீர் இன்னும் முழுமையாக வடியவில்லை. தேங்கிக் கிடக்கிறது.

சாக்கடை போல
மழை நீர் மட்டும் தேங்கிக் கிடந்தால் பரவாயில்லை. ஆனால் ஊரில் உள்ள அத்தனைக் கழிவு நீரும் இதனுடன் கலந்து சாக்கடையாக மாறி நிற்கிறது.

கொசுக்கள் படையெடுப்பு
மழை வெளுத்த சமயத்தி்ல சற்று கொசுக்கள் அடங்கியிருந்தன. ஆனால் தற்போது எங்கு பார்த்தாலும் தேங்கிக் கிடக்கும் நீரில் லட்சக்கணக்கில் கொசுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

டெங்கு
இதன் காரணமாக டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க மக்களும், அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டாக வேண்டிய நிலை.

சுட வைத்துக் குடிங்கள்
குடிநீரை சுட வைத்து குடிக்க வேண்டும். தேங்கிக் கிடக்கும் நீரில் அதிக அளவில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். கொசுக்களிலிருந்து தப்பிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.

அரசுக்குத்தான் நிறைய வேலை
நகராட்சி, மாநகராட்சி, உள்ளாட்சி நிர்வாகங்கள் தேங்கியுள்ள நீரை எவ்வளவு விரைவாக அகற்ற முடிகிறதோ அதைச் செய்ய முன்வர வேண்டும். கொசுக்களின் உற்பத்தி பெருகுவதைத் தடுக்கும் வகையில் தடுப்பு மருந்துகளை அடித்து மக்களைக் காக்க முன்வர வேண்டும்.
மழை நின்று விட்டதே என்று அசமஞ்சமாக யாரும் இருந்து விடக் கூடாது. குறிப்பாக அரசு இயந்திரம். காரணம், இனிமேல்தான் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டியது முக்கியம்.












Click it and Unblock the Notifications