தனுஷ் தாக்கல் செய்த அங்க அடையாளங்கள் எவை? திடுக் மருத்துவ அறிக்கை
மதுரை: தனுஷ் உடலில் உள்ள சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக மதுரை உயர் நீதிமன்றத்தில் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
நடிகர் தனுஷ் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்பது அனைவருக்கும் தெரியும். இதனிடையே திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி தனுஷ் தங்கள் மகன் என கூறினர். மேலும் இது தொடர்பாக மதுரை மாவட்ட மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதில் தங்களின் மூத்த மகனான கலையரசன் 16 வயதில் காணாமல் போனதாகவும், அவர் தான் தனுஷ் என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் தங்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் கதிரேசன், மீனாட்சி தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு மேலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் தனுஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் நடிகர் தனுஷின் பள்ளி சான்றிதழ்களின் உண்மை நகல்கள் தனுஷ் தரப்பிலும், அவரை தங்கள் மகன் என உரிமை கோரி வழக்கு தொடர்ந்துள்ள கதிரேசன் தம்பதி தரப்பிலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கதிரேசன் தரப்பில் அங்க மச்சம் அடையாளம் குறிப்பிடப்பட்ட 10-ம் வகுப்பு பள்ளி மாற்றுச் சான்றிதழை வழக்கறிஞர் டைட்டஸ் தாக்கல் செய்தார். தனுஷ் தரப்பிலும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அங்க அடையாளம் குறிப்பிடப்படவில்லை.
இதையடுத்து, கதிரேசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அங்க, மச்ச அடையாளங்கள் நடிகர் தனுஷின் உடலில் உள்ளதா? என்பதை கண்டறிந்து அது தொடர்பாக தனுஷ் தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் தனுஷின் அங்க அடையாளங்கள் குறித்து மதுரை மருத்துவமனை டீன் வைரமுத்துராஜா முன்னிலையில் 2 மருத்துவர்கள் அறிக்கை சமர்ப்பித்தனர். அதில் தனுஷ் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனுஷின் உடலில் உள்ள சில மச்ச அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ அறிக்கை தனுஷ் வழக்கின் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
