மாரடைப்பால் மரணித்த இன்ஸ்பெக்டர்.. பாடையை சுமந்து வந்த எஸ்.பி.. தர்மபுரியில் நெகிழ்ச்சி!
உயிரிழந்த இன்ஸ்பெக்டர் உடலை தோளில் தூக்கி வந்தார் மாவட்ட எஸ்.பி.
தருமபுரி: என்ன பொறுப்பில் இருந்தால் என்ன, என்ன படித்தால் என்ன, என் இனம், என் சகோதரர்கள் என்று வந்துவிட்டால் எல்லாமே காணாமல் போய்விடுகிறது என்பதற்கு உதாரணம்தான் இந்த தருமபுரி சம்பவம்.
குப்பூர்பகுதியை சேர்ந்தவர் கண்ணப்பன் வயது. இவருக்கு வயது 48. இவருக்கு தென்றல் என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். வேதாரண்யம் வாய்மேடு பகுதியில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவருக்கு 4 நாள் லீவு கிடைத்துள்ளது. இதனால் ஊருக்கு போய் குடும்பத்தில் எல்லாரையும் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பி வந்திருக்கிறார் கண்ணப்பன்.

மாரடைப்பால் மரணம்
நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு வீட்டில் எல்லோருடனும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி வந்துவிட்டது. இதனால் பதறிப்போன குடும்பத்தினர் அவரை தூக்கிக் கொண்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு ஓடினார்கள். ஆனால் கண்ணப்பன் மாரடைப்பால் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.

மாவட்ட எஸ்.பி.
இதனால் கண்ணப்பனின் உடல் சொந்த ஊரான குப்பூர் பகுதியிலேயே அடக்கம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தார்கள். அதற்கான ஏற்பாடும் தயாரானது. கண்ணப்பனின் இறுதி ஊர்வலத்தில் அந்த ஊர் மக்கள் எல்லோருமே கலந்துகொண்டனர் . இறுதி ஊர்வலம் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென அங்கு தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார்.

அரசு மரியாதை
அப்போது கண்ணப்பனின் உடலை தோளில் சுமந்து கொண்டு சென்றிருப்பவர்களிடம் போய் தானும் சடலத்தை தோள் மீது ஏந்திக் கொண்டார். இப்படியே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தோளிலேயே மாவட்ட எஸ்.பி. சுமந்து வந்தார். இதை அங்கிருந்த எல்லோருமே கண்டு நெகிழ்ந்தார்கள். மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு மறைந்த கண்ணப்பனுக்கு 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செய்யப்பட்டு, பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.

மதிப்பிற்குரியது
தன்னுடன் இணைந்து பணியாற்றவில்லை என்றாலும், தனக்கு அறிமுகமே இல்லை என்றாலும் தன் மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டரின் மறைவுக்கு மாவட்ட எஸ்.பி. அளித்த மரியாதையையும், கண்ணியமும், பரஸ்பர உணர்வும் மதிப்பிற்குரியது! வணக்கத்திற்குரியது!!












Click it and Unblock the Notifications