பாமகவை உடைத்தது பாஜக? கூட்டணி விவகாரத்தில் அப்பா ராமதாஸ், மகன் அன்புமணி இடையே வெடித்தது மோதல்!
சென்னை: 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான கருத்து வேறுபாடுகளால், பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக பிளவுபடும் உருவாகி உள்ளது. பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். பாமகவின் தலைவராக இனி தாமே செயல்படுவேன் என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி தற்போது வரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் நீடித்து வருகிறது. 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பாஜக தலைமையிலான கூட்டணியிலேயே பாமக நீடிக்க வேண்டும் என்பது அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸின் விருப்பம்.

ஆனால் பாமகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற வேண்டும்; அதிமுக வாக்குகள், பாமகவுக்கு கிடைக்கும் போது கட்சிக்கு கூடுதல் எம்.எல்.ஏக்கள் கிடைப்பர்; அதனால் அதிமுக அணிக்குதான் போக வேண்டும் என்பது அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் நிலைப்பாடு.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் தற்போது, பாஜக கூட்டணியில் அதிமுகவின் ஆதரவுடன் ராஜ்யசபா எம்பியாக இருக்கிறார். கடந்த 6 ஆண்டுகளாக தமக்கு எப்படியும் மத்திய அமைச்சர் பதவி கிடைத்துவிடும் என எதிர்பார்ப்புடன் இருந்தார் அன்புமணி ராமதாஸ். ஆனால் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. தற்போது அன்புமணியின் பதவி காலம் முடிவடைய உள்ளது.
தற்போது பாஜக- அதிமுக கூட்டணி இணைந்தால் மீண்டும் ராஜ்யசபா எம்பியாகிவிடலாம்; இதன் மூலம் தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணி அரசில் எப்படியாவது மத்திய அமைச்சராகிவிட முடியும் என்பதும் அன்புமணி ராமதாஸின் கணக்கு.
ஆனால், பாஜகவுடனான கூட்டணியால் பாமகவின் வாக்கு வங்கி மிக மோசமான நிலைமைக்கு போய்க் கொண்டிருக்கிறது; பாமகவை காப்பாற்றுவதற்கு திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதுதான் சரியாக இருக்கும் என பிடிவாதம் காட்டுகிறாராம் ராமதாஸ்.
இத்தகைய மோதல்களில்தான், கடந்த சில மாதங்களாகவே அப்பா ராமதாஸ், மகன் அன்புமணி இடையே மோதல் இருந்து வந்தது. பாமகவின் சிறப்பு பொதுக் குழுவில் இருவருக்கும் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்தது. இதன் பின்னர் இருவரும் சமாதானமடைந்துவிட்டதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது தமிழ்நாட்டில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளார். அமித்ஷா வருகை தரும் நிலையில், பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை டிஸ்மிஸ் செய்து பாஜக கூட்டணிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications