வேலூர்: திருப்பத்தூர் அருகே தனியார் பள்ளி தாளாளர் இரும்புக்கம்மியால் அடித்துக் கொலை
வேலூர்: தனியார் பள்ளி தாளாளர் ஒருவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே மர்ம நபர்களால் இரும்புக்கம்பியால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லப்பட்ட நபரின் பெயரின் அன்பு,43 என்பதாகும். இவர் திருப்பத்தூர் அருகே உள்ள மொழகரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். தர்மபுரி மாவட்டம் இருமத்தூரில் உள்ள தனியார் பள்ளியின் தாளாளராக இருந்தார். இவரது மனைவி கனகா. இவர்களுக்கு ஆதவ், அக்னி, அஜய் ஆகிய 3 மகன்கன் உள்ளனர்.

இருமத்தூரில் இருந்து தனது காரில் நேற்று நள்ளிரவில் அன்பு சொந்த ஊருக்கு புறப்பட்டார். ரயில் நிலையம் அருகே அவரது வீட்டுக்கு செல்லும் வழியில் வந்தபோது திடீரென மர்ம நபர்கள் மற்றொரு வாகனத்தை கொண்டு வந்து அன்புவின் காரின் முன் பகுதியில் இடித்து நிறுத்தினர்.
கண் இமைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் கையில் இருந்த மிளகாய் பொடியை தூவினர். அன்பு சுதாரிக்கும் முன்பேயே, கையில் இருந்த இரும்பு தடியால் அன்புவின் தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக தாக்கினர். மேலும் கழுத்து பகுதியில் அரிவாளால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் அன்பு அதே இடத்தில் துடி துடித்து உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அன்புவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அன்பு கொலையுண்டு கிடந்த இடம் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாகும். அன்புவை காரில் இருந்து இறங்க வைக்க மற்றொரு வாகனம் மூலம் விபத்து ஏற்படுத்தி நிறுத்தி இந்த கொலையை அரங்கேற்றி உள்ளனர். இதனால் அன்பு காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்துள்ளது. காரின் முன் பக்க கதவு திறந்து கிடந்தது.

அன்புவின் காரில் இருந்த செல்போன், பணம் ஆகியவை அப்படியே இருந்தது. அன்பு அணிந்திருந்த மோதிரம், நகைகள், கடிகாரம் ஆகியவையும் அப்படியே இருந்தது. எனவே கொள்ளை முயற்சியில் அன்பு கொலை செய்யப்படவில்லை என தெரியவந்தது. பள்ளி நடத்தும் இடத்தில் ஏற்பட்ட ஏதாவது பிரச்சினை காரணமாகவோ அல்லது சொந்த ஊரில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாகவே அன்பு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் அடிக்கடி நிகழும் மர்ம கொலைகளால் பதற்றம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications