''8 எதிர்பார்க்கிறோம், அஞ்சாவது கிடைக்கனும்''- இது தேமுதிக மனக்கணக்கு!
சென்னை: லோக்சபா தேர்தலில் குறைந்தபட்சம் 5 தொகுதிகளில் நம் கட்சி வெற்றிக் கனியை சுவைக்கும் என்று தேமுதிக இரண்டாம் மட்டத் தலைவர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் நம்பிக்கையுடன் சொல்லி வருகின்றனர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் திருவள்ளூர்(தனி), வடசென்னை, மத்திய சென்னை, விழுப்புரம்(தனி), கடலூர் ,கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை, கரூர் , நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர் என 14 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது.
தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து இரு கட்டங்களாக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அதேபோன்று அவரின் மனைவி பிரேமலதாவும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மற்றும் மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆகியோரும் தேமுதிக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர்.

இதை வைத்துத்தான் 2016:
தேமுதிகவை பொறுத்தவரை இந்தத் தேர்தல் மிக முக்கியமானது என அக்கட்சி தலைமை கருதுகிறது. இதில் வெற்றி பெற்றால் 2016ம் ஆண்டுசட்டசபை தேர்தலில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என கணக்கு போடுவதே இதற்கு காரணம்.

14 தொகுதிகளிலும் பம்பரம் போல சுழன்று:
அதனால் கட்சி தலைமை உத்தரவுப்படி 14 தொகுதிகளிலும் தேமுதிக வெற்றிக்காக அக்கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

8 சாதகம்:
14 தொகுதிகளில் போட்டியிட்டாலும் அதில் எட்டு தொகுதிகள் தங்களுக்கு சாதகமாக இருப்பதால் அவற்றில் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கணக்கில் தேமுதிக தலைமை உள்ளது.

ஐந்து உறுதி:
எட்டிலும் குறிப்பாக திருப்பூர், கடலூர், திருவள்ளூர் (தனி), சேலம், விழுப்புரம்(தனி) என ஐந்து தொகுதிகளில் தங்கள் கட்சி வெற்றி பெறும் என தேமுதிக இரண்டாம் கட்டதை தலைவர்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர்.

ஊடகங்கள் குண்டைப் போடுகின்றதே:
ஆனாலும் தொகுதிகளில் இருந்து வரும் தகவல்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் வெளியாகும் கருத்துக் கணிப்புகளும் சாதகமாக இல்லாததால் தேமுதிக தலைமை கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications