சொன்னீங்களே... செஞ்சீங்களா... டிவியில் களைகட்டும் திமுக விளம்பரங்கள்
சென்னை: அதிமுகவிற்கு எதிராக திமுக சார்பில் அனைத்து டிவி சேனல்களிலும் போடப்படும் 'சொன்னீங்களே... செஞ்சீங்களா?' விளம்பரம்தான் இப்போது ஹாட் டாபிக். குறும்படம் பாணியில் வெளியிடப்படும் இந்த விளம்பரம் ஜெயலலிதாவின் 2011 தேர்தல் வாக்குறுதிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வந்தாலே அரசியல் கட்சியினர் பலரும் வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்காளர்களைக் கவர்ந்து வெற்றி பெற நினைப்பது வழக்கமான ஒன்றுதான். ரூபாய்க்கு 3 படி லட்சியம் ஒரு படி நிச்சயம் என்று சொல்லி வாக்கு கேட்டார் அண்ணா. ஆனால் காமராஜரோ அதெப்படி முடியும்னேன் என்று கேட்டார்.
அண்ணாவிற்கு விழுந்தது ஒட்டு. காங்கிரஸ் ஆட்சிக்கு அப்போதே கெட் அவுட் சொன்னார்கள் தமிழக மக்கள். திராவிட கட்சி ஆட்சிகள் கடந்த 50 ஆண்டுகாலமாக நடந்து கொண்டிருக்கிறது.
சத்துணவு திட்டம் கொண்டு வந்தார் எம்.ஜி.ஆர் பிச்சைக்கார திட்டம் என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர். ஆனால் அதுவே எம்.ஜி.ஆருக்கு வெற்றியை தேடித்தந்தது.

இலவசங்கள் அமோகம்
1989ல் சத்துணவில் முட்டையைச் சேர்த்தார் கருணாநிதி. அதேபோல 2006 சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் இலவச கலர் டிவி, 2 ஏக்கர் நிலம், மாணவர்களுக்கு சைக்கிள், விவசாய கடன் ரத்து, ஒரு கிலோ அரிசி 2 ரூபாய் (தேர்தல் வெற்றிக்குப்பின் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என மாற்றப்பட்டது) என ஏராளமான இலவச திட்டங்கள் இந்த தேர்தலில் ஒரு சேர அறிவிக்கப்பட்டு, வாக்காளர்களை திணறடித்தன.

ஜெயலலிதாவின் அறிவிப்புகள்
2011 சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி என இலவசங்களை அள்ளி வீசி வெற்றி பெற்றார். ஆடு மாடு கொடுத்தார் ஜெயலலிதா. 2011ல் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை ஜெயலலிதா. அதில் சில வாக்குறுதிகளை கையில் எடுத்து ஜெயலலிதாவிற்கு எதிராக விளம்பரம் செய்யத் தொடங்கியுள்ளது திமுக.
திமுகவின் விளம்பரம்
வீடுகள் தோறும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அளிக்கப்படும், ஏழைகளுக்கு இலவச நிலம், ஆகியவைகளை கையில் எடுத்துள்ள திமுக அதை வைத்து சொன்னீங்களே... செஞ்சீங்களா? என்று கேட்டு அதிமுக அரசுக்கு எதிராக விளம்பரம் செய்து வருகிறது, முடியட்டும்... விடியட்டும் என்று முடிகிறது.
இரட்டை இலை
இந்த விளம்பரத்தில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முதலில் இடம் பெற்றது. இது ஜெயலலிதாவிற்காக வாக்கு சேகரிப்பது போலவே தெரிகிறது. அது தெரிந்துதான் என்னவோ அடுத்து வந்த 3 சென்ட் நிலம் விளம்பரத்தில் இரட்டை இலையை எடுத்து விட்டார்கள்.
|
சமூக வலைத்தளங்களில்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா பாணியில் விளம்பரம் வெளியிட்டனர். அதுவே கடும் விமர்சனத்திற்கு ஆளானது. இப்போது வெளியாகும் விளம்பரமும் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications