காங்., முஸ்லீம் லீக்கும் புறக்கணிப்பு.. அதிமுக மட்டுமே பங்கேற்ற சட்டசபை கூட்டம்!!
சென்னை: சட்டசபையில் 79 திமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை திரும்பப் பெறாததால் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் இன்றைய கூட்டத்தை புறக்கணித்துள்ளன.
சட்டசபையில் கடந்த 17-ந்தேதி பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.குணசேகரன், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் 'நமக்கு நாமே' பயணம் குறித்து ஒரு கருத்தை தெரிவித்தார். அதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க. உறுப்பினர் பேசிய கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கும்படி தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்தனர். இதை சபாநாயகர் ஏற்க வில்லை. இதனால் சபையில் அமளி அதிகமானது. அவர்களை சபாநாயகர் அமைதிப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
இதனால் அன்று சபைக்கு வந்திருந்த எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 79 திமுக எம்.எல்.ஏ.க்களையும் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார்.
வெளியேற மறுத்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் சபை காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மறுநாள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போட்டி சட்டசபை கூட்டமும் நடத்தினார்கள். இதனால் 2 நாட்கள் சட்டமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சஸ்பெண்ட் செய்யப்படாத 10 தி.மு.க. எம்.எல்.ஏ.க் களும், காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி சட்ட சபையில் வாதாடி வெளிநடப்பு செய்து வந்தனர்.
ஆனால் அவர்களது கோரிக்கையை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனால் எஞ்சிய 10 திமுக எம்.எல்.ஏ.க்களும் நேற்று முதல் சட்டசபை கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர். அதே நேரத்தில் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தது.
பின்னர் சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி நேற்று மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியிருந்தார். இந்த நிலையில் இன்று காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் சட்டசபை கூட்டத்தை புறக்கணித்துள்ளன.
ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் எவருமே இல்லாமல் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
