ஜல்லிக்கட்டு: ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டசபையில் திமுக வெளிநடப்பு
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையை புறக்கணித்து எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை: தமிழக சட்டசபையில் 2017ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் செய்த சாதனைகள் பற்றி ஆளுநர் தனது உரையில் வாசித்தார்.
இந்த நிலையில் சட்டசபை எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். ஜல்லிக்கட்டு, விவசாயிகளின் பிரச்சினைக்காக வெளிநடப்பு செய்துள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.

சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரை என்பது வெறும் சம்பிரதாய உரையாகவே உள்ளது என்று குற்றம் சாட்டினார். அதிமுக அரசுக்கு பிரச்சினையை கையாள தெரியவில்லை என்றும், பேச்சுவார்த்தை நடத்த தெரியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேரடியாக சென்று போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
