சட்டசபை "சீட்"டுக்காக... கருணாநிதி- ஸ்டாலின் இடையே சிண்டு முடிவதா? ஓ.பி.எஸ்சுக்கு திமுக கண்டனம்
சென்னை: சட்டசபையில் இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக சபாநாயகர் தனபாலிடம் மு.க. ஸ்டாலின் கொடுத்த பட்டியலில் கருணாநிதி பெயரே இல்லை என்று நிதி அமைச்சரும் சபை முன்னவருமான ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ. கோவி.செழியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வீல்சேரில் அமர்ந்தபடியே சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் கருணாநிதிக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்து நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக ஸ்டாலின் கொடுத்த பட்டியலில் கருணாநிதி பெயரே இல்லை; சட்டசபைக்கு கருணாநிதி வருவதையே ஸ்டாலின் விரும்பவில்லை என்றெல்லாம் பதிவு செய்திருந்தார். இந்த அறிக்கை திமுகவுக்குள் சலசலப்பை கிளப்பிவிட்டுவிட்டது.
இதனிடையே ஓ. பன்னீர்செல்வம் அப்பட்டமான பொய்யை சொல்கிறார் என்று திமுக எம்.எல்.ஏ. கோவி. செழியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செழியன் கூறுகையில், சபாநாயகரிடம் கொடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் கருணாநிதியின் பெயரும் இருக்கிறது. பட்டியலில் பெயர் இல்லை என்று ஓ.பி.எஸ் சொல்வது அப்பட்டமான பொய்.
எங்கள் கட்சியின் சார்பில் வென்ற அனைத்து எம்.எல்.ஏக்களின் பெயரையும் குறிப்பிட்டு மனு கொடுக்கும்போது கருணாநிதியின் பெயர் எப்படி விடுபடும்? அப்படியானால் திருவாரூருக்கு ஒரு எம்.எல்.ஏ. இருப்பதை ஓ.பி.எஸ் மறைக்கிறாரா? இருக்கை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சபாநாயகரைச் சந்தித்து மனு கொடுத்தோம். அவர் எங்களிடம், ஏற்கெனவே இருக்கை தொடர்பாக நீங்கள் அளித்த மனுவை பரிசீலித்தேன். இப்போது மீண்டும் பரிசீலிக்கிறேன் எனக் கூறினார்.
ஆனால் பட்டியலில் கருணாநிதி பெயரே இல்லை என்று சொல்வதன் மூலம் சிண்டு முடியும் வேலையில் ஈடுபடுகிறார் ஓ.பி.எஸ். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications