ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் : திமுகவில் இன்று முதல் விருப்பமனு - 13ல் நேர்காணல்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் விருப்பமனுக்களை பெற்று வருகின்றனர். அண்ணா அறிவாலயத்தில் வரும் 13ம் தேதி நேர்காணல் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதியில் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர். திமுகவில் நேர்காணல் மூலம் வேட்பாளர் தேர்வு நடைபெற உள்ளதால் விருப்பமனுக்கள் விநியோகம் செய்யும் பணி அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியுள்ளது. 13ஆம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது.
முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே. நகர் தொகுதி காலியானது. இந்த தொகுதியில் ஏப்ரல் மாதம் 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதையடுத்து தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

ஆர்.கே. நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் வருகிற 13ம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் நேற்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், போட்டியிட விரும்புகிறவர்கள் அதற்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 12ஆம் தேதி மாலை 6 மணிக்குள், அண்ணா அறிவாலயத்திலுள்ள திமுக அலுவலகத்தில் ஒப்ப டைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேட்பாளர் நேர்காணல் வரும் 13ஆம் தேதி திங்கட்கிழமை அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும். வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.25 ஆயிரம். தலைமைக் கழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் விண்ணப்ப படிவத்தை ரூ. 1,000 வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தார்.
இதன்படி இன்று காலை முதல் விருப்பமனுக்கள் விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. 1000 ரூபாய் கொடுத்து விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர். விருப்பமனுக்களை அளித்தவர்களை அழைத்து நேர்காணல் நடத்தி வேட்பாளரை ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் தேர்வு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications