மு.க. அழகிரியின் கோபம்... பிரேமலதாவின் கேள்வி.. காரணம் "இது"?!
சென்னை: திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்து மு.க.அழகிரி காட்டமாக விமர்சித்துள்ளார். அதேபோல திடீரென இவர்கள் மீண்டும் கூட்டணி வைத்ததற்கான காரணம் என்ன என்று பிரேமலதா விஜயகாந்த்தும் கேட்டுள்ளார். இவர்கள் தவிர மேலும் பலரும் திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்து விமர்சிக்கிறார்கள். காரணம், 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு.
2013ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் கூடியது. காலை முதல் அனல் பறக்க விவாதங்கள் நடந்தன.
பேசியவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே காங்கிரஸுடன் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்கக் கூடாது என்றே பேசினர். குறிப்பாக துரைமுருகன் பேச்சில் அனல் பறந்தது. திமுகவின் முதுகில் காங்கிரஸ் குத்தி விட்டதாக பலரும் குமுறினர்.
கூட்டத்தில் தலைவர்கள் எல்லாம் பேசிய பிறகு கடைசியாக திமுக தலைவர் கருணாநிதி தனது கருத்துக்களை எடுத்து வைத்தார். அவரது கருத்து இதுதான்...

மோடி குறித்து சலனம் இல்லை
காலையில் இருந்தே உங்களுடைய கருத்துகளை கேட்டு வருகிறேன். கருத்துகளை கேட்டு முடிவு செய்யும் இயக்கம் நமது இயக்கம். சமீபகாலமாக பத்திரிகைகளில் வரும் செய்திகளை வைத்து நரேந்திர மோடி குறித்து பேசுகிறீர்கள். ஆனால் எனக்கோ, பேராசிரியருக்கோ, ஸ்டாலினுக்கோ அந்த சலனம் ஏற்படவில்லை.

கண்ணியமிக்க கட்சியாக பாஜக இல்லை
பாரதீய ஜனதா நம்முடன் கூட்டணி வைக்காத கட்சி இல்லை. பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி ஆகியோர் கண்ணியமான தலைவர்கள். இவர்கள் இருவரும் எந்த கோரிக்கை வைத்தாலும் நிறைவேற்றி கொடுத்து இருக்கிறார்கள். அந்த வகையில் அவர்களை மதிப்புமிக்க தலைவர்களாகவே கருதுகிறோம்.

தலைமை முக்கியம்
ஆனால் அப்போது இருந்த பாரதீய ஜனதா வேறு. இப்போதுள்ள பாரதீய ஜனதா வேறு. கூட்டணி குறித்து பேசும்போது அந்த கட்சியின் தலைமை யார்? என்பதை பார்க்க வேண்டும். அதிலிருந்து வித்தியாசங்களை உணர முடியும். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியே இல்லை என்று சொல்லவில்லை. குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு கூட்டணி குறித்து முடிவு செய்யும்.

துரோகம் செய்த காங்கிரஸ்
நம்முடன் இருந்து துரோகம் செய்த காங்கிரசுடன் இனி கூட்டணி கிடையாது. காங்கிரசுடன் கூட்டணி வைத்து விடுவோம் என்று நீங்கள் ஒரு போதும் எண்ண வேண்டாம்.

கனிமொழி மீது களங்கம் விளைவித்தது காங்கிரஸ்
ஊழல் குற்றச்சாட்டில் கனிமொழிக்கு களங்கம் விளைவித்தும், ஆ.ராசா மீது பழி சுமத்தியும், தயாளு அம்மாளுக்கு துயரத்தை ஏற்படுத்தியதோடு கட்சிக்கும் களங்கம் விளைவித்தவர்கள், இவர் களை பலிகடாவாக ஆக்கிவிட்டு தப்பி விட்டார்கள். இந்த வழக்கு இன்னும் நடக்கிறது.

பூஜ்ஜியங்களைப் போட்டு சிக்க வைத்தவர்கள்
சி.பி.ஐ. யாருடைய நிர்வாகத்தில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியும். பூஜ்ஜியங்களை போட்டு ஊழல் குற்றச்சாட்டில் தி.மு.க.வை சிக்க வைத்து விட்டார்கள்.

காங்கிரஸால் சிறைக்குப் போன கனிமொழி, ராசா
கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் சிறைக்கு போனார்கள். நீங்கள் (தொண்டர்கள்) இருக்கும் போது நான் ஏன் பயப்பட வேண்டும். தனித்து நின்று தேர்தலை சந்திக்கும் தைரியம் நமக்கு உண்டு. கழகம் நிறுத்தும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கடைசி வரை ஒற்றுமையாக இருந்து கட்சியின் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என்றார் கருணாநிதி.

மாற்றம் இல்லாத நிலையில் கூட்டணி ஏன்?
இந்தக் கூட்டத்திற்குப் பிறகுதான் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை ஓரம் கட்டி விட்டு போட்டியிட்டது திமுக. தற்போது மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி ஏற்படுத்தியுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் கருணாநிதி சுட்டிக் காட்டிய விவகாரங்களில் எந்தவிதமான நிவாரணமும், நிவர்த்தியும் ஏற்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள் விமர்சகர்கள். இப்படிப்பட்ட நிலையில் காங்கிரஸுக்கு முக்கியத்துவம் கொடுக்க கருணாநிதி முடிவு செய்தது ஏன் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகிறார்கள்.

தேமுதிகவுக்கு முக்கியத்துவம் தந்திருக்கலாம்
காங்கிரஸுக்கு முதல் முக்கியத்துவம் கொடுத்து முதல் ஆளாக உள்ளே கொண்டு வந்ததற்குப் பதிலாக தேமுதிகவை முதல் ஆளாக திமுக கூட்டணிக்குள் கொண்டு வந்திருந்தால் அது "மாஸ்டர் ஸ்டிரோக்"காக இருந்திருக்கும் என்பதும் பலரது கருத்தாக உள்ளது.

அதை வைத்து பலரையும் இழுத்திருக்க முடியும்
காங்கிரஸைக் காட்டி பலரை இழுக்கலாம் என்றாலும் கூட, விஜயகாந்த் வந்தால், அவரைக் காட்டி பல முக்கியக் கட்சிகளை இழுத்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் என்பதும் பலரின் கருத்தாக உள்ளது.

காயலான் கடைக்குப் போன காங்கிரஸ்
மேலும் காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு அந்த அளவுக்கு அபிப்பிராயம் இல்லை. தொகுதிக்கு சில ஆயிரம் வாக்குகள் இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் மீதான புகார்கள், கெட்ட பெயர்கள் இன்னும் மாறவில்லை, போகவில்லை என்பதும் முக்கியமானது. இப்போதே சமூக வலைதளங்களில் ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் திமுக - காங்கிரஸ் நடந்து கொண்டதை வைத்து ஓட்ட ஆரம்பித்து விட்டனர்.

இதற்குப் பெயர் என்ன?
இப்படிப்பட்ட நிலையில் திமுக, காங்கிரஸ் மீண்டும் தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே கை கோர்த்திருப்பது சந்தர்ப்பவாதம் இல்லாமல் வேறு என்ன என்றுதான் மு.க.அழகிரியும் கேட்டுள்ளார், பிரேமலதாவும் கேட்டுள்ளார் என்கிறார்கள்.

கணக்கில் ஏதாவது பாயிண்ட் இருக்கலாம்
உண்மைதான்.. ஆனால் கருணாநிதி எதையும் நாலு முறைக்கு 40 முறை யோசித்தே முடிவெடுப்பவர். நாம் ஒன்று நினைப்பதற்கு முன்பு அதை பத்து வகையாக யோசித்து ஆராய்ந்தே முடித்து விடக் கூடியவர். எனவே கருணாநிதியின் கணக்கில் ஏதாவது சூட்சமம் இருக்கலாம்... பொறுத்திருந்து பார்ப்போம்.!












Click it and Unblock the Notifications