திமுகவில் உட்கட்சி குடைச்சல்? அதிமுகவுக்கு தாவிய சங்கரன்கோவில் கவுன்சிலர்கள்! பரபரப்பு பின்னணி!
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் சுயேச்சையாக வெற்றிபெற்ற திமுக ஆதரவு கவுன்சிலர்கள் இருவர், அதிமுகவுக்கு தாவி ஆளுங்கட்சிக்கு குட் பை சொல்லியுள்ளனர்.

தலைகீழ் நிகழ்வு: பொதுவாக எதிர்க்கட்சிகளில் இருந்து ஆளுங்கட்சியில் இணையத் தான் எல்லோரும் ஆர்வம் காட்டுவார்கள் என்று கேள்விபட்டிருப்போம், பார்த்திருப்போம். ஆனால் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடந்திருப்பதோ அதற்கு தலைகீழான நிகழ்வு. உட்கட்சி கோஷ்டிப்பூசலால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே திமுக ஆதரவு நிலைப்பாட்டில் செயல்பட்டு வந்த 2 கவுன்சிலர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவரது தலைமையை ஏற்று அதிமுகவில் இணைந்திருக்கிறார்கள்.
புறந்தள்ளி விடக்கூடாது: இந்த நிகழ்வை திமுக தலைமை லேசாக புறந்தள்ளி விடக்கூடாது. ஆளுங்கட்சியாக இருக்கும் போதே இப்படிச் செல்கிறார்கள் என்றால் அதற்கான காரணங்கள் என்ன?, யார் கொடுத்த குடைச்சலால் இப்படி கட்சியை விட்டே சென்றிருக்கிறார்கள் என்பதை எல்லாம் கவனத்தில் கொண்டு சாட்டையை சுழற்ற வேண்டும். இல்லையென்றால், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் அதன் தாக்கம் எதிரொலிக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலிடம் வரை சென்ற பஞ்சாயத்து: தற்போது அதிமுகவில் இணைந்த கவுன்சிலர் சரவணக்குமாரிடம், கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது, நீ தான் துணை சேர்மன் கேண்டிடேட் என்று கூறி 50 லட்சம் ரூபாயை ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்கள் வசூலித்ததும் பிறகு அது தொடர்பான பஞ்சாயத்து உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா, அன்பகம் கலை வரையும் சென்றதும் பழைய கதை. மேலிடத்திலிருந்து விழுந்த டோசால் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்த ஆளுங்கட்சி முக்கியப் புள்ளி, நம்மை பற்றி மேலிடம் வரை சென்று புகார் சொல்லிவிட்டாரே என்ற கோபத்தில் கவுன்சிலர் சரவணக்குமாரை தாக்குதல் நடத்தவும் முயன்றிருக்கிறார்.
அதிமுகவுக்கு அழைத்த மாஜி அமைச்சர்: இது தொடர்பாக புகார் காவல் நிலையம் வரை சென்றது தனிக்கதை. மொத்தத்தில் அதிருப்தியில் உள்ள கட்சிக்காரர்களை சமாதானம் செய்து சரிக்கட்ட வேண்டிய தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஈ.ராஜா, அது தொடர்பான எந்த முயற்சியையும் முன்னெடுத்தது போல் தெரியவில்லை. ஈ.ராஜா மெத்தனமாக செயல்பட்ட நிலையில் எதிர்தரப்பில் மாஜி அமைச்சர் ராஜலட்சுமியும், சட்டமன்ற உறுப்பினர் குட்டியப்பா என்ற கிருஷ்ணமுரளியும் கவுன்சிலர் சரவணக்குமாரையும் இன்னொரு திமுக ஆதரவு சுயேச்சை பெண் கவுன்சிலரையும் அதிமுக பக்கம் அழைத்து சென்றுவிட்டனர்.












Click it and Unblock the Notifications