கம்பம் திமுகவில் கலகம்! ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. Vs நகராட்சி சேர்மன்! ஓயாத உட்கட்சி பஞ்சாயத்து!
தேனி: தேனி மாவட்டம் கம்பத்தில் வெடித்துள்ள திமுக உட்கட்சி பிரச்சனையால் அது தொடர்பான பஞ்சாயத்து மாவட்ட பொறுப்பு அமைச்சரான ஐ.பெரியசாமியிடம் சென்றிருக்கிறது.
தாம் வகிக்கும் பதவிக்கு உரிய மரியாதையை கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தரவில்லை என்பது நகர்மன்றத் தலைவரின் புகாராக உள்ளது.
கம்பம் ராமகிருஷ்ணனை அழைக்காமல் நகராட்சி சார்பில் எந்த நிகழ்ச்சியையும் நடத்தக் கூடாது என அவரது ஆதரவாளர்கள் முட்டுக்கட்டை போடுவதாக நகராட்சி சேர்மன் தரப்பு கொதிக்கிறது.

தேனி மாவட்டம்
தேனி மாவட்டம் கம்பம் நகர்மன்ற தலைவராக இருப்பவர் வனிதா. இவரது கணவர் நெப்போலியனுக்கும் கம்பம் வடக்கு நகரச் செயலாளரும், ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளரான வீரபாண்டிக்கும் இடையே நடந்த வார்த்தைப் போர் தான் பஞ்சாயத்தை கூட்டியுள்ளது. சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. சென்னை சென்றுவிட்ட நிலையில், கம்பம் நகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது.

1984லிருந்து திமுக உறுப்பினர்
எம்.எல்.ஏ. ஊரில் இல்லாத போது எப்படி இந்த நிகழ்ச்சியை நடத்தலாம் என அவரது ஆதரவாளரும், கம்பம் வடக்கு நகரச் செயலாளருமான வீரபாண்டி கேட்டிருக்கிறார். இதனால் கொதித்துப் போன கம்பம் நகராட்சி சேர்மன் வனிதாவின் கணவர் நெப்போலியன், தாம் 1984லிருந்து திமுகவிலிருந்து வருவதாகவும் கட்சியின் புரோட்டகால் பற்றி தனக்கு முழுமையாக தெரியும் என்றும் மாற்றுக் கட்சியிலிருந்து வந்த நீங்கள் சொல்லித் தரவேண்டிய அவசியமில்லை எனவும் நகரச் செயலாளர் வீரபாண்டியிடம் எகிறியிருக்கிறார்.

நகராட்சி சேர்மன் கணவர்
மேலும், இதுவரை எந்த அரசு விழாவிலாவது, நிகழ்ச்சியிலாவது நகர்மன்ற தலைவர் என்ற அடிப்படையில் வனிதாவின் பெயரை கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. போட விட்டிருக்கிறாரா என ஆதங்கத்தை கொட்டித்தீர்த்திருக்கிறார். நகராட்சி சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு கம்பம் ராமகிருஷ்ணனுக்காக எதற்கு காத்திருக்க வேண்டும் என வக்கீலாகவே மாறி தனது மனைவிக்காக வாதாடியிருக்கிறார் நெப்போலியன்.

ஜெயக்குமார் ஆதரவாளர்
கம்பம் நகர்மன்றத் தலைவர் வனிதாவின் கணவர் நெப்போலியன், திமுக மாவட்டச் செயலாளர் தேர்தலின் போது கம்பம் ராமகிருஷ்ணனுக்கு எதிராக போட்டியிட தலைமையிடம் விருப்பமனு கொடுத்திருந்த ஜெயக்குமாருக்கு ஆதரவாக நின்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications