தேர்தல் கமிஷனுக்கே "ட்விஸ்ட்" வைக்கும் அ.தி.மு.க.- கருணாநிதி சாடல்
சென்னை : தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஆர்.கே.நகர் தொகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி புகார் கூறியுள்ளார்.
இதற்கு காவல் துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் துணை போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து கருணாநிதி கேள்வி பதில் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...

கடந்த நான்கு ஆண்டு காலத்தில் எதையெல்லாம் செய்வோம் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பாக ஜெயலலிதா செய்தாரோ, அதில் 100 ல் பத்து சதவிகிதம் கூட நிறைவேற்றப்பட வில்லை.
அவை வெறும் வாக்குறுதிகளாக, அறிவிப்புகளாக மட்டுமே உள்ளன. கொடுத்த வாக்குறுதிகளை 60 சதவிகிதம் நிறைவேற்றினாலே அவை சாதனைகளாகக் கருதப்படும். ஆட்சி முடியப் போகும் இறுதி ஆண்டில் இவை அனைத்தையும் செய்ய காலமும் இடம் கொடுக்காது, நிதி நிலைமையும் சரியில்லை. இனி என்ன சாதிக்க முடியும்?"" இந்தப் பதில் என்னுடை யது அல்ல; வார இதழ் ஒன்றில் வெளியானது.
ஜெயலலிதாவின் வருமானத்திற்கு மீறிய சொத்து பத்து சதவிகிதத்திற்கும் குறைவு தான் என்று நீதிபதி குமாரசாமி தெரிவித்திருக்கிறார். ஆனால் நாளேடு ஒன்று அவர் ஒவ்வொரு முறை தேர்தலில் நிற்க வேட்பு மனு தாக்கல் செய்கிறபோதும், ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு இரண்டு மடங்காகிறது என்று எழுதியது.
ஆங்கில நாளேடு ஒன்றோ, ஜெயலலிதாவின் வங்கியிருப்பு நான்கு ஆண்டுகளில் ஐந்து மடங்காகியுள்ளது என்று தலைப்பிட்டுள்ளது.
அ.தி.மு.க. அரசு பதவியேற்ற நாள்முதல் பழி வாங்கும் நடவடிக்கையில் அரசு அதிகாரிகளைத்தான் பெரிதும் தண்டிக்கிறார்கள். காவல் துறையைச் சேர்ந்த சில மூத்த அதிகாரிகள் தி.மு. கழக ஆட்சியில் முக்கியமான பொறுப்புகளில் இருந்தார்கள் என்பதற்காக அவர்களையெல்லாம் கண் காணாத, அதிகாரம் ஏதுமில்லாத பதவி களிலே மாற்றி அவர்கள் நான்காண்டு காலமாக இருந்து வருகிறார்கள்.
13 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பதவியிலே அமர்த்த வேண்டுமென்று நீதிமன்றங்களே கூறிய போதும், அவர்களைப் பணியிலே நியமிக்க இந்த அரசு முன் வரவில்லை.
அந்த வரிசையில்தான் தற்போது ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் தி.மு. கழக ஆட்சியில் ஐ.நா. பணியில் சேர அனுமதி பெற்றார் என்ற காரணத்திற்காக, அவர் பணி முடிந்து திரும்பிய போது அவரை "சஸ்பென்ட்"" செய்தார்கள்.
அந்த அதிகாரி, அதை எதிர்த்து, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த தீர்ப்பாயத் தலைவர் சயத் ரபத் ஆலம், உறுப்பினர் சுதிர்குமார் ஆகியோர் அளித்த தீர்ப்பில், "தமிழக அரசின் செயல் நகைச்சுவையாக உள்ளது. சத்திய பிரியாவின் பணியை, தமிழக அரசு தவறாகப் புரிந்து கொண்டதாகத் தெரிகிறது. அவரை ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்ற மத்திய அரசு அனுமதித்தது.
ஐ.நா. அமைதிப் படையில், சத்திய பிரியா பணியாற்றிய காலத்தில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு அதிகார மில்லை. எனவே சத்திய பிரியா மீதான, சஸ்பெண்ட் உத்தரவை, தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். அவருக்கு உரிய அந்தஸ்திலான பதவியை அளிக்க வேண்டும். சர்வதேச அளவிலான பணிக்குச் சென்ற தமிழகப் பிரிவைச் சேர்ந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரியைப் பாராட்டாமல் அவரைத் தண்டிப்பது சரியல்ல"" என்று தெரிவித்திருக்கிறார்கள் என்றால், இதிலிருந்தே இந்த அரசின் பழி வாங்கும் செயலைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா?
தமிழகத்திலே உள்ள அனைத்துத் தொலைக் காட்சிகளிலும், தி.மு.கழக மாநகராட்சி மன்ற உறுப்பினர் தெய்வலிங்கத்தை, அ.தி.மு.க.வினர் எவ்வாறெல்லாம் தாக்கினார்கள் என்பதைத் திருப்பித் திருப்பிக் காட்டினார்கள். ஆனால் இந்த ஆட்சியிலே அவர் மீதே வழக்குத் தொடுத்திருக் கிறார்கள்.
அரசு எவ்வழி, அரசின் பல்வேறு துறைகளும், சென்னைப் பல்கலைக் கழகமும் அதே வழியில் நடந்திருக்கின்றன. சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு 95 உதவிப் பேராசிரியர்கள் தேர்ந்தெடுத்தது பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உண்மை விவரங்கள் வெளிவந்துள்ளன. இந்தப் பணிக்கு மூன்றாண்டு பணி அனுபவம் வேண்டும் என்ற நிபந்தனையும், பி.எச்.டி. படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் மீறப்பட்டு, தகுதி இல்லா தவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளதாம். இந்த ஆட்சியிலே முறைகேடு நடக்காவிட்டால்தானே ஆச்சரியம்?
சென்னைத் துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை, 19 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1,816 கோடி ரூபாய்ச் செலவில் மேம்பாலச் சாலை அமைக்க தி.மு. கழக ஆட்சியில் திட்டமிடப்பட்டு, இந்தியப் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அவர்களை அழைத்து வந்து 2009ஆம் ஆண்டு ஜனவரியில் என்னுடைய தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதுதான் காரணம், அந்தப் பணிகள் கடந்த நான்காண்டு காலமாக முடங்கிக் கிடப்பதற்கு!
20 சதவிகிதப் பணிகள் முடிவடைந்த நிலையில், 29-3-2012 அன்று அ.தி.மு.க. அரசு, நீரோட்டத்தைப் பாதிக்கும் வகையில் பணிகள் நடப்பதாகக் கூறி இந்தத் திட்டத்திற்குத் தடை விதித்தது. முக்கியமான திட்டம் என்பதால் மத்திய அரசு பல முறை அழுத்தம் கொடுத்தும் அ.தி.மு.க. அரசு கேட்கவில்லை.
மத்தியில் ஆட்சி மாறிய பிறகும், தமிழகம் வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, "சாலைப் பணிகள் தொடர, மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்"" என்று கூறிய பிறகும் மாநில அரசு அசைந்து கொடுக்க வில்லை. சென்னை மாநகர அடிப்படைக் கட்டமைப்பு வசதிக்கான முக்கியத் திட்டத்திற்கே இதுதான் நிலைமை. இந்த இலட்சணத்தில் முதலீடுகள் தமிழகத்திற்கு வரவேண்டுமென்றால் எப்படி வரும்?
ஆர்.கே. நகர் பற்றி "தொகுதியில் ஒளி மயம் - தூங்கும் தேர்தல் ஆணையம்"" என்ற தலைப்பில் வார இதழ் ஒன்று எழுதிய கட்டுரையில் ஒரு சில பகுதிகள் இதோ :-
"சாலைகள் அனைத்தையும் புதுப்பிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முக்கியமான சாலைகளை ஒரே நாளில் போட்டு விடுகிறார்கள். சாலைகள் நடுவே இருக்கும் சென்டர் மீடியன்களில் பெயின்ட் அடிப்பது, அ.தி.மு.க. கொடி கட்டுவது, உடைந்து போய் இருக்கும் பழைய மீடியன்களை அகற்றுவது என எங்கு பார்த்தாலும், வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இத்தனை நாளாகப் பாழடைந்திருந்த கட்சி அலுவலகங்களை எல்லாம் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். தண்டையார்பேட்டை நகராட்சி நான்காவது மண்டல அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு, தரமான சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. மண்டல அலுவலகம் முதல், எங்கு பார்த்தாலும் பச்சை நிறம்தான் காணக் கிடைக்கிறது.
பூண்டி தங்கம்மாள் நகர் குடிநீர்ப் பிரச்சினை முக்கியமாக இருந்தது. அங்கு ஒரு சில நாட்களிலேயே திருவொற்றியூரில் இருந்து பைப் லைன் போட்டு குடிநீரைக் கொண்டு வந்துள்ளனர். மீனாம்பாள் நகர் பாலம் பணிகள் கட்டுமானப் பொருள்கள் விலை அதிகரிப்பால், நிறுத்தி வைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகி இருந்ததால், அந்தப் பாதி பாலம் கட்சி போஸ்டர், கண்ணீர் அஞ்சலி, பிறந்த நாள் வாழ்த்து போஸ்டர் ஒட்டத்தான் பயன்பட்டு வந்தது.
ஆனால், தற்போது அதன் முன் இருந்த ஆக்கிரமிப்புகள் எல்லாம் "பொக்லைன்"" கொண்டு அகற்றப்பட்டு மீண்டும் வேலைகள் ஆரம்பிக்கும் சூழல் உருவாகியிருப்பது போல் மக்களுக்குக் காட்டுகிறார்கள்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் இவ்வளவு ஜரூர் காட்டுவது தேர்தல் கமிஷனுக்கு மட்டும் தெரியாமல் இருப்பதுதான் "ட்விஸ்ட்"". பொதுப்பணித் துறை வாகனங்களும், வருவாய்த் துறை வாகனங்களும் ஆர்.கே. நகரைச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. அமைச்சர்கள் அனைவரும் அங்கு வந்து விட்டனர். தேர்தல் ஆணையமும் களத்தில் இறங்க வேண்டும்"" இது அந்த வார இதழ் எழுதியது.
இதோ மற்றொரு வார இதழ் எழுதியுள்ள வாசகங்கள் :- "பேரிடர் நிவாரண டீம் கூட அத்தனை வேகமாகச் செயல்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. ஆர்.கே. நகரில் ஜெ. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முதல் நாள் இரவு முழுவதும் அமைச்சர்கள் - அதிகாரிகள் மேற்பார்வையில் மின்னல் வேகத்தில் பணிகள் நடந்து கொண்டிருந்தன.
மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு அவசர அவசரமாக ஜெ.வுக்குப் பிடித்த பச்சை நிறம் பூசப்பட, புது ஏ.சி. மெஷினும் பொருத்தப் பட்டது. தார் சாலை போடுவதற்கான 40 இயந்திரங் களைக் கொண்டு வந்து கடற்கரை சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி கட்டடத்திலிருந்து ராயபுரம் வழியாக தண்டையார்பேட்டை அலுவலகம் வரை புது ரோடு போடப்பட்டது.
அதுபோலவே வேட்பு மனு தாக்கல் செய்த பின் ஜெ. திரும்பும் வழியான மகாராணி தியேட்டர், புதிய கல்லறை சாலை, கடற்கரை சாலை ஆகியவையும் புதுத் தாரில் ஜொலித்தன. போலீஸ்காரர்களும், அதிகாரிகளும் சாலை போடுவதற்கான பொருள்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
வேட்பு மனு தினமான ஜூன் 5ந்தேதி காலை 8 மணிக்கே கமிஷனர் தலைமையில் ஏ.சி.., டி.சி., ஜே.சி., ஆகிய காக்கி அதிகாரிகள் உட்பட 2000 போலீசார் வழியெங்கும் நிறுத்தப்பட்டிருந்தனர். வரவேற்பு ஆடம்பரங்களால் மதியம் 12 மணியிலிருந்து போக்குவரத்து ஆங்காங்கே நிறுத்தப்பட்டு நெருக்கடி அதிகமானது.
இதெல்லாம் பரவாயில்லீங்க, என்று நம் காதைக் கடித்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், "சி.எம். நாமினேஷன்ங்கிறதால காலையிலிருந்து வியாசர்பாடி குடோனுக்குப் போக வேண்டிய குட்ஸ் ரயில் கூட வரலை. இந்த ஏரியா தேர்தல் பொறுப்பாளரான மந்திரி மோகன் ரயில்வே மினிஸ்ட்ரி கிட்டேயே பேசி, நாமினேஷன் முடிஞ்சி சி.எம். திரும்புற வரைக்கும் எந்த குட்ஸையும் அனுப்பாதபடி செஞ்சிட்டாரு. சென்ட்ரல் கவர்ன்மெண்ட், எலெக்சன் கமிஷன் எல்லாம் அவங்க நினைச்சபடி நடக்குது"" என்றனர்.
ஒரு தலைவரின் வேட்பு மனுத் தாக்கலுக்காக அலுவல கத்தையே புதுப்பொலிவாக மாற்றி அமைத்த வரலாற்றை முதன் முறையாகப் படைத்திருக்கிறது தேர்தல் கமிஷன். மாடியில் இருந்த தேர்தல் அதிகாரி சவுரிராஜனின் அறையை ஜெயலலிதாவுக்காக கீழே மாற்றினார்கள்.
"இன்டீரியர்"" வேலைப்பாடுகள் முதல்வரின் அறையை ஞாபகப் படுத்தின. அந்த சிறிய அறைக்குள் மூன்று புதிய ஸ்பிளிட் ஏ.சி. மிஷின்கள் போடப்பட்டிருந்தன. டேபிள், நாற்காலி எல்லாமே புத்தம் புதிசு. டிரே கூட ஜெயலலிதாவுக்குப் பிடித்த பச்சை நிறத்தில் தான்!"" என்று எழுதியுள்ளது.
தி.மு. கழகமும், எதிர்க்கட்சிகளும் அந்தத் தொகுதியைப் புறக்கணித்ததன் காரணம் இப்போது புரிகிறதா?
இவ்வாறு தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications