ஆதரவு கொடுக்க யாருமில்லை.. ஸ்ரீரங்கத்தில் தனித்து விடப்பட்ட திமுக.. கவலையில் கருணாநிதி!
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் கி்ட்டத்தட்ட தனித்து விடப்பட்ட நிலையில் திமுக உள்ளது. அதிகம் எதிர்பார்த்த முக்கியக் கட்சிகள் எதுவும் திமுக பக்கம் கூட திரும்பிப் பார்க்கவில்லை. ஆளாளுக்கு வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இதனால் திமுகவின் வெற்றி வாய்ப்பு என்ற எதிர்பார்ப்பு படு வேகமாக மங்கி வருகிறது.
ஆரம்பமே அடுத்தடுத்து சறுக்கலாகி வருகிறது திமுகவுக்கு. ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் தனது பலத்தைக் காட்டினால், அடுத்து வரும் பொதுத் தேர்தலை பெரும் தெம்புடன் சந்திக்கலாம் என்று நினைத்திருந்தது திமுக. ஆனால் நடக்கிற நிகழ்வுகளைப் பார்த்தால் அதிமுக படு எளிதாக ஜெயித்து விடும் போலத் தெரிகிறது.
மேலும் தனது பலத்தையும், செல்வாக்கையும் நிரூபிக்க திமுக கடுமையான போராட்டத்தை சந்திக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

முதலில் வேட்பாளரை அறிவித்தும்...
திமுகதான் முதலில் வேட்பாளரை அறிவித்தது. வழக்கமாக அறிவிக்கும் அதிமுக கூட சற்று பிந்தித்தான் தனது வேட்பாளரை அறிவித்தது. எனவே திமுக தரப்பு இதுவே நமக்கு வெற்றிக்கான அறிகுறி என்று குதூகலிக்க ஆரம்பித்தது.

பிரமாண்ட பிரசாரப் படை
அதேபோல அதிமுகவுக்கு நிகராக திமுககவும் பெரும் பிரசாரப் படையை களம் இறக்கியது. 64 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நேரு தலைமையில் அறிவித்தார் கருணாநிதி.

ஆதரவு கேட்டு கடிதம்
வேட்பாளரை அறிவித்த கையோடு அனைத்துக் கட்சிகளும் திமுக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கடிதமும் வெளியிட்டார் கருணாநிதி.

திரும்பிக் கூட பார்க்காத கட்சிகள்
ஆனால் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பெரிய கட்சிகள் என்று யாருமே சொல்லவில்லை. அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சி மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளது. மற்ற யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை.

லெப்ட் சிக்னல் போட்டு ரைட்டில் திரும்பிய ராமதாஸ்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆதரவு தெரிவிப்பார் என்று திமுக நம்பியது. அவரும் நம்பிக்கை அளிப்பது போல, கருணாநிதியின் கோரிக்கையைப் பரிசீலிப்போம் என்று கூறியிருந்தார். ஆனால் தேர்தலைப் புறக்கணிப்பதாகவும், யாருக்கும் ஆதரவும் கிடையாது என்றும் பாமக நிர்வாகக் குழுவில் முடிவெடுத்து விட்டனர்.

கம்யூனிஸ்ட்டுகளும் ஏமாற்றம்
கம்யூனிஸ்ட் கட்சிகளாவது ஆதரவு தர முன்வருமா என்ற நப்பாசையில் திமுக இருந்தது. ஆனால் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் போட்டியிடப் போவதாக அறிவித்து விட்டது. அது போட்டியிட்டால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதைத்தான் ஆதரிக்கும்.

வைகோவும் ஏமாற்றினார்
டாக்டர் ராமதாஸ் இல்லத் திருமணத்தின்போது திமுக, மதிமுக உறவு புதுப்பிக்கப்பட்டதாக அனைவரும் நம்பினர். வைகோவும், ஸ்டாலினும் சிரித்துப் பேசி மகிழ்ந்தனர். ஆனால் அத்தோடு புஸ்வாணமாகி விட்டது. ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் மதிமுக ஆதரவாவது கிடைக்கலாம் என்ற சின்ன நம்பிக்கையில் திமுக இருந்தது. ஆனால் மதிமுகவும் தேர்தலைப் புறக்கணித்துள்ளது.

அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த வேல்முருகன்
மறுபக்கம் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

விளங்க முடியாத கவிதையாக விஜயகாந்த்!
தேமுதிகவை இன்னும் முழுமையாக கைவிட திமுகவுக்கு மனம் இல்லை. கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் அக்கட்சியை தன் பக்கம் இழுக்க முயற்சித்தபடிதான் உள்ளது. இந்த இடைத் தேர்தலிலும் விஜயகாந்த் ஆதரவைப் பெற ரகசியமாக முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் உள்ளன. ஆனால் விஜயகாந்த்தோ விளங்க முடியாத கவிதை நான் என்பது போல காட்சி தருகிறார்.

திருமாவளவன் நிலை என்ன...!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மட்டுமே இப்போது பாக்கி. திமுக வேட்பாளரை கருணாநிதி அறிவித்த தினத்தில் உடனடியாக கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார் திருமாவளவன். அவரும் மு.க.ஸ்டாலினும் தனியாக சந்தித்து ஆலோசனையும் நடத்தினர். தேர்தல் வியூகம் குறித்து இருவரும் பேசியதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இதுவரை திருமாவளவன் வெளிப்படையாக ஸ்ரீரங்கத்தில் தனது கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இதுவரை அறிவிக்காமல் உள்ளார்.

முடிவு என்ன
இப்படியே போய்ட்டிருந்தா எப்படி என்று கேட்கும் அளவுக்கு திமுகவின் நிலை இப்போதைக்கு கவலைக்கிடமாகவே உள்ளது. தேர்தல் களத்தில் இந்த நிமிடத்தில் திமுக தனியாகவே இருக்கிறது. மறுபக்கம் பாஜக படு தெம்பாக களம் இறங்கத் துடித்துக் கொண்டிருக்கிறது. ஆட்சி அதிகாரம் இருக்கும் தைரியத்தில் அதிமுக அமைதியாக உள்ளது.
என்ன செய்யப் போகிறது திமுக...?












Click it and Unblock the Notifications