சஸ்பெண்ட் செய்யப்படாத திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை புறக்கணிப்பு
சென்னை: திமுக எம்.எல்.ஏ.க்கள் 79 பேர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறும் வரை சட்டசபை நிகழ்வுகளை புறக்கணிப்பதாக சஸ்பெண்ட் செய்யப்படாத திமுக எம்.எல்.ஏ.க்கள் அறிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபையில் கடந்த 17-ந்தேதி அன்று நமக்கு நாமே பயணம் தொடர்பாக திருப்பூர் தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குணசேகரன் தெரிவித்த கருத்துக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 79 பேர் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் திமுக சார்பில் நேற்று கண்டன பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 79 எம்.எல்.ஏ.க்கள் திரும்பி வரும் வரை சட்டசபை நிகழ்ச்சிகளை புறக்கணிப்பது என எஞ்சிய 10 திமுக எம்.எல்.ஏ.க்களும் முடிவு செய்துள்ளனர்.
திமுகவின் 79 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இன்று 4-வது நாளாகும். வரும் 26-ந் தேதி வரை திமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் அதுவரை 10 திமுக எம்.எல்.ஏக்களும் சட்டசபையை புறக்கணிக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications