ஜெ. பிறந்தநாளில் அதிமுக, ஸ்டாலின் பிறந்தநாளில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் மார்ச் 1ம் தேதி அதாவது மு.க. ஸ்டாலினின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என திமுக வட்டாரத்தில் கூறப்படுகின்றது.
விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சி தலைமையில் அணிகள் உருவாகி, கருவாகி வருகின்றது.
இந்த நிலையில் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தனது பிறந்த நாள் அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய 40 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்தார்.

ஆனால் தற்போது தான் ஒவ்வொரு தொகுதி வாரியாக திமுக நேர்காணலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் வரும் மார்ச் மாதம் 1ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் ஆகும்.
ஜெயலலிதா பிறந்த நாள் அன்று அதிமுக வேட்பாளர்களை அறிவித்தது போல், மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் அன்று திமுக வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதிமுக பட்டியல் அறிவித்த போதே, திமுகவும் தனது வேட்பாளர் பட்டியலை தயாராக வைத்திருந்ததாகவும், ஆனால் கூட்டணிக்காக அக்கட்சி பொறுமை காத்து வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.
மார்ச் முதல் தேதி முழு அமாவாசை என்பதால், அன்றைய தினம் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் முழு வெற்றியடையும் என்றும் சென்டிமென்ட்டாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முழு வேட்பாளர் பட்டியலை அறிவிக்க முடியாவிட்டால் கூட மார்ச் 1ம் தேதி அன்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவிக்க வேண்டும் என அக்கட்சி முக்கிய நிர்வாகிகள் கருணாநிதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிய வருகின்றது.
எனவே, திமுக சார்பில் முதல் வேட்பாளர் பட்டியல் மார்ச் 1ம் தேதி வெளியாகலாம் என அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications