அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் ராமதாஸ்... துரைமுருகன் கடும் தாக்கு!
ஊழல் அதிமுக அரசின் செய்தித் தொடர்பாளராக செயல்படாமல் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆக்கப்பூர்வ அரசியல்வாதியாக செயல்பட வேண்டும் என்று தி.மு.க-வின் முதன்மைச் செயலாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான துரைமுரு
சென்னை : காவிரி டெல்டா மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம் அமைக்க உத்தரவிட்ட அதிமுக அரசை விமர்சிக்காமல், திமுகவை விமர்சிப்பதன் மூலம் ராமதாஸ் அதிமுகவின் செய்தித் தொடர்பாளராகவே மாறியுள்ளதாக தி.மு.க-வின் முதன்மைச் செயலாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
பாமகவை காட்டமாக விமர்சித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :''கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில் பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம் அமைக்க அரசு ஆணை வெளியிட்டது, தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குதிரை பேர அ.தி.மு.க அரசு. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை பா.ம.க நிறுவனர் தலைவர் ராமதாசும், அவரது பிள்ளை அன்புமணியும் தி.மு.க.வின் மீது பாய்ந்து பிராண்டுவதையே கலையாகக் கடைப்பிடித்து வருகிறார்கள்.
ஆறு வருடங்களாக ஆட்சியிலிருக்கும் அதிமுகவை, இருவரையுமே கைது செய்து சிறையில் அடைத்த அதிமுக ஆட்சியை விமர்சிப்பதை விட, சமூக நீதியை பாட்டாளி மக்களுக்கு வழங்கிய திமுக-வை விமர்சிப்பதில் ஆர்வம் காட்டி, அதிமுகவின் செய்தித்தொடர்பாளர்களாகவே மாறி வருவது வேதனையளிப்பதாக இருக்கிறது. ஆளும் அதிமுக அரசின் மீது தி.மு.க. குற்றம் சாட்டினால், அதற்கு பதில் எங்கிருந்து வருகிறது என்றால் தைலாபுரம் தோட்டத்திலிருந்தோ அல்லது அவரது தனயன் அன்புமணியிடமிருந்தோதான் பதில் வருகிறது.

ஏன் திமுக மீது விமர்சனம்?
இவர்களுக்கும் அதிமுகவுக்கும் அப்படியென்ன ரகசிய உறவு என்ற கேள்வி பாட்டாளி சொந்தங்களுக்கே ஏற்பட்டு, இப்போது பா.ம.க.வில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். தன் கட்சியிலிருந்து சாரை சாரையாக வெளியேறுபவர்களை தக்கவைத்துக்கொள்ள எங்கள் தலைவர், செயல் தலைவர் ஆகியோரையும், திமுகவையும் விமர்சித்தால்தான் முடியும் என்று ராமதாஸ் நினைக்கிறார் என்றே நான் கருதுகிறேன். அதனால்தான் முதலமைச்சரோ, அதிமுக அமைச்சர்களோ குற்றச்சாட்டுக்குப் பதில்சொல்லும் முன்பு தி.மு.க.வை விமர்சித்து, ஆளும் ஊழல் அதிமுக மீது மக்கள் கோபித்துக்கொண்டு விடக்கூடாது என்பதில் ராமதாஸ் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

தடுத்திருக்கலாமே
பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலத்துக்கான ஆயத்தப் பணிகள் 2007-2008-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றதாக ராமதாஸ் கூறுகிறார். அப்போது எங்களுடன் கூட்டணியில் இருந்தது ராமதாஸின் பாமகவா அல்லது வேறு கட்சியா. அப்போதே தலைவர் கருணாநிதியிடம் எடுத்துக்கூறி தடுத்து இருக்கலாமே.

திட்டம் எப்போது அறிவிக்கப்பட்டது?
ஆனால் ராமதாஸ் சொன்னதில் உண்மை ஏதும் இல்லை. பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலக் கொள்கை என்பது அன்புமணி 35 வயதில் தலைவர் கருணாநிதியின் பரிந்துரையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தாரே அப்போதே இந்தக் கொள்கை மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு விட்டது.

அமைதி காத்தது ஏன்?
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2004 முதல் 2009 வரை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி தன் அமைச்சரவை சகாவாக அன்றைக்கு இருந்த பெட்ரோ கெமிக்கல் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானிடம் கூறி தடுத்து நிறுத்தியிருக்க வேண்டியதுதானே. அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக இந்த பெட்ரோ கெமிக்கல் மண்டலங்கள் உருவாக்கும் கொள்கையை எதிர்க்காமல் அமைதி காத்து விட்டு, இன்றைக்கு மக்களைச் சந்திக்கிறேன் என்று பயணம் நடத்துவது ஏன்.

அரசாணை வெளியிடவில்லை
கருணாநிதியைப் பொறுத்தமட்டில் தமிழகத்துக்கு முதலீடுகள் கிடைக்கும் என்ற வகையில் மத்திய அரசின் கொள்கைப்படி இந்த திட்டம் பற்றி ஆய்வுசெய்வதற்குத்தான் முயற்சிகள் எடுத்தாரே தவிர, மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை முன்கூட்டியே உணர்ந்ததால்தான் அவர் ஆட்சியிலிருக்கும் வரை அந்தப் பகுதியை "பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலமாக" அறிவிக்காமல் இருந்தார். அதற்கான அரசு ஆணை எதையும் வெளியிடாமல் இருந்தார்.

அதிமுகவிற்கு ஆதரவு
தி.மு.க. கூட்டணியில் இருந்த ராமதாஸ் இதையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு, ஊழல் அதிமுக செய்த தவறுக்கு முட்டுக்கொடுப்பதற்காக இப்படி தி.மு.க. மீது புழுதி வாரித்தூற்றும் செயலில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. கைதுசெய்து சிறையில் அடைத்த அதிமுகவிற்கு சேதாரம் ஆகிவிடக்கூடாது.

ஏணியை எட்டி உதைக்கலாமா?
ஆனால் பாட்டாளி சொந்தங்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு அளித்து, அவர்களை டாக்டர்களாகவும், இன்ஜினீயர்களாகவும், அரசு பதவிகளிலும் அமர வைத்து அழகு பார்த்த கருணாநிதியையும் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினையும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்காகவும், அனைத்து அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்காகவும் தொய்வின்றிப் போராடிவரும் திமுகவுக்கும் கெட்டபெயரை ஏற்படுத்த முயலும் ராமதாஸின் செயல் "ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும்" செயல்.

திமுக எதிர்க்கிறது
கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் குதிரை பேர அரசு அறிவித்துள்ள பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலத்தை, திமுக உறுதியாக எதிர்க்கிறது. இதை ஸ்டாலின் திரும்பத் திரும்ப உறுதி செய்திருக்கிறார். மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களைப் பதவியே போனாலும் பரவாயில்லை என்று எதிர்த்த இயக்கம்தான் திமுக.

ஆக்கப்பூர்வ அரசியலில் ஈடுபடுங்கள்
மத்திய அமைச்சராக இருக்கும்போது மக்களைச் சந்திக்காமல், அமைச்சர் பதவி போனதும் மக்களிடம் "புல்லட்" பயணம் போகும் அரசியலை எந்தக் காலத்திலும் ஸ்டாலின் செய்வதில்லை. ஆகவே பெட்ரோகெமிக்கல் முதலீட்டு மண்டலத்தை தி.மு.க. எதிர்க்கிறது என்பதில் ராமதாசுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் இந்த அறிக்கை தெளிவுபடுத்தும் என்ற நோக்கிலேயே இந்தச் செய்திகளைக் கோர்த்து வெளியிடுகிறேனே தவிர வேறு ஒன்றும் அல்ல. ஆகவே ராமதாசும் அன்புமணி ராமதாசும் தி.மு.க.மீது 'வெகுண்டு' எழுவதையும் கைவிட்டு, தமிழக மக்களின் ஒட்டுமொத்த நலனுக்கும் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அதிமுகவின் செய்தித்தொடர்பாளராக இருப்பதையும் நிறுத்திவிட்டு, ஆக்கபூர்வமான அரசியல் பணிகளில் ஈடுபடவேண்டும்'' என்று துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications