ஓ.பி.எஸ். கொண்டு வந்த தீர்மானம் ஜெ. புகழ் பாடுகிறது என்று கூறி திமுக வெளிநடப்பு
சென்னை: தமிழக சட்டசபையில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஜெயலலிதா புகழ் பாடுவதாக அமைந்துள்ளதாகக் கூறி திமுக மீண்டும் வெளிநடப்பு செய்தது.
தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பேசுவதற்கு அனுமதி அளிக்கவில்லை எனக் கூறி திமுக, தேமுதிக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
பின்னர் மீண்டும் அவைக்குத் திரும்பின அக்கட்சிகள். அப்போது முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை நீரைத் தேக்க கேரளா ஒத்துழைக்க வேண்டும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

விவாதத்திற்குப் பின்னர் இத்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது.
இந்நிலையில், இத்தீர்மானம் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் புகழ் பாடுவதாக அமைந்துள்ளதாகக் கூறி மீண்டும் திமுக வெளிநடப்பு செய்தது.
இது தொடர்பாக திமுக தலைவர் துரைமுருகன் கூறுகையில், ‘திமுக ஆட்சிக் காலத்தில் தான் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்த அனுமதி பெறப்பட்டது. ஆனால், தற்போதைய இத்தீர்மானம் ஜெயலலிதா புகழ் பாடுவதாகவே அமைந்துள்ளது. நீர்மட்டத்தை உயர்த்த திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மூடி மறைக்கப் பட்டுள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
