திமுக தோல்வியை கண்டு துவண்டு போய் மூலையில் முடங்கும் இயக்கமல்ல... மு.க.ஸ்டாலின்
சென்னை: ‘தோல்வியை கண்டு துவண்டு போய் மூலையில் முடக்கிப் போகும் இயக்கம் தி.மு.க. அல்ல' என வடசென்னையில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 3ம் தேதி தனது 91வது பிறந்தநாளைக் கொண்டாடினார் திமுக தலைவர் கருணாநிதி. அன்னாரது பிறந்தநாளை திமுகவினர் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். தமிழகமெங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடர்ந்து வருகிறது.
அந்தவகையில், முன்னாள் எம்.எல்.ஏ., பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் 2,091 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்றிரவு சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. விழாவுக்கு துறைமுகம் பகுதி செயலாளர் அ.மணிவேலன் தலைமை தாங்கினார்.
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.சற்குணபாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, ஏழை-எளிய, நலிவுற்ற மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கினார்.
அவ்விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :-

தமிழர்களின் பாதுகாப்பு அரண்...
தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழகத்தை தாண்டி வெளி மாநிலங்கள் கடல் கடந்து வாழும் தமிழர்களின் பாதுகாப்பு அரணாக கருணாநிதி விளங்குகிறார். கடல் கடந்து வாழும் தமிழர்கள் கருணாநிதி பிறந்தநாளை உள்ளத்தாலும், உணர்வாலும் கொண்டாடி வருகிறார்கள்.

மாற்றுத் திறனாளி...
கருணாநிதி முதலமைச்சர் பொறுப்பில் இருந்தபோதெல்லாம், ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்காக தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். ஒரு பிறந்தநாளில் மனிதனை மனிதனே இழுக்கும் கொடுமையான கை ரிக்ஷாக்களை அழித்து சைக்கிள் ரிக்ஷாக்களை வழங்கினார். இன்னொரு பிறந்தநாளில் ஊனமுற்றோரை மாற்றுத்திறனாளிகள் என்று பெயர் மாற்றி அவர்களுக்கு உபகரணங்களை வழங்கினார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் தமிழகத்தில் மரம் வளர்க்கும் விழிப்புணர்வை ஒரு பிறந்த நாள் விழாவில் ஏற்படுத்தினார்.

வெற்றியும், தோல்வியும்...
1949-ல் தொடங்கிய தி.மு.க. 1957-ம் ஆண்டு தேர்தல் களத்தில் நின்று 15 இடங்களில் வெற்றி பெற்றது. 1962-ம் ஆண்டு தேர்தலில் 52 இடங்களை பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. 1967-ம் ஆண்டு அண்ணா தலைமையில் ஆட்சி அமைத்தது. அண்ணா மறைவுக்கு பிறகு 1971-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இதுவரை எந்த இயக்கமும் வெற்றிபெறாத வகையில் 184 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. 1976-ல் நெருக்கடி நிலையால் ஆட்சி கலைக்கப்பட்டு 13 ஆண்டுகளுக்கு பிறகு, 1989-ம் ஆண்டு ஆட்சி அமைத்தது. 1991-ல் ராஜீவ்காந்தி படுகொலை மூலம் வீண் பழி சுமத்தி தி.மு.க.வை தோற்கடித்தனர்.

முடங்கி போகும் இயக்கமல்ல...
1996-ல் ஆட்சி, 2001-ல் தோல்வி, 2006-ல் வெற்றி, 2011-ல் தோல்வி. 2016 வரவிருக்கிறது. அதில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஏனெனில், தோல்வியை கண்டு துவண்டு போய், மூலையில் முடங்கி போய் கிடக்கும் இயக்கம் அல்ல தி.மு.க.

தேர்தல் கமிஷனுடன் கூட்டணி...
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமைத்து சந்தித்தது. ஆனால் அ.தி.மு.க. எந்த கட்சிகளுடனும் கூட்டணி வைக்கவில்லை. தேர்தல் கமிஷனுடன் தான் கூட்டணி வைத்தது. ஓட்டுக்கு பணம் வாங்கினாலோ, கொடுத்தாலோ குற்றம் என்று அறிக்கை விட்ட தேர்தல் ஆணையர் பிரவீன்குமார், தேர்தலுக்கு பிறகு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை தடுக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார்' என இவ்வாறு மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

உற்சாக வரவேற்பு...
விழாவில், வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் போஸ், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், வடசென்னை மகளிர் வழக்கறிஞரணி தலைவர் ஷிம்லா முத்துச்சோழன், கவுன்சிலர் தேவ ஜவஹர் உள்பட தி.மு.க.வை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர். வடசென்னை தொகுதிக்கு வருகை தந்த மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications