அரக்கோணம் ராஜாளி விமானப்படைத்தளம் அருகே வெடித்துச் சிதறிய வெடிபொருள் - நாய் பலி
வேலூர்: வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே அமைந்துள்ள ராஜாளி விமானப்படைத்தளப் புகுதியில் மர்ம வெடிபொருள் வெடித்ததில் நாய் ஒன்று பலியான சம்பவம் பெரும் பதட்டத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த புளியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட எல்பிஎஸ் நகர் உள்ளது. இதன் அருகே இந்தியாவின் மிக முக்கிய விமானப்படை தளமான ராஜாளி விமானப்படைதளம் உள்ளது. புதிய விமானிகளுக்கான விமானப்படை பயிற்சி, வான்வெளி கண்காணிப்பு போன்றவை இங்கு நடைபெறுகின்றன.
இந்த தளத்தின் சுற்று சுவறுக்கு வெளியே கடந்த கடந்த 23 ஆம் தேதி மாலை குப்பை மேட்டில் இருந்த பொருள் ஒன்றை அங்கிருந்த நாய் கவ்வியபோது அப்பொருள் அதிக சப்தத்துடன் வெடித்து சிதறியது. இச்சம்பவத்தில் நாய் வாய் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தது. வெடித்த பொருள் வெடிகுண்டாக இருக்கலாமோ என அப்பகுதியினர் சந்தேகமடைந்து காவல்துறைக்கு தெரிவித்தனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற அரக்கோணம் உதவி காவல்கண்காணிப்பாளர் சக்திகணேசன், நகர காவல்நிலைய ஆய்வாளர் அருள் உள்ளிட்ட போலீஸார் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். மேலும் இறந்த நாயின் சடலம் கைப்பற்றப்பட்டு செய்யூர் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இறந்த நாயின் சடலம் நேற்று அரக்கோணத்தை அடுத்த செய்யூர் கால்நடை மருத்துவர் துரை தலைமையிலான மருத்துவ குழுவினரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் அப்பொருள் வெடிக்க இருந்த சில நிமிடங்களுக்கு முன் அப்பகுதியில் இறந்த ஒருவரின் சடலம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டதாகவும் அப்போது பட்டாசு வெடிக்கப்பட்டதாகவும், அதில் இருந்து வெடிக்காத பட்டாசு ஏதேனும் இருந்து அதை நாய் கவ்விய சமயம் அது வெடித்திருக்கலாம் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications