"பிச்சை போடவே போடாதீர்கள்” - புதுமையான பிரச்சாரத்தில் ஈரோடு மாணவர்கள் சமூகநல குழு!
ஈரோடு: சாலைகளில் சுற்றித் திரியும் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போட வேண்டாம் என்று ஈரோட்டில் கல்லூரி மாணவ, மாணவியர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
சாலை ஓரங்களிலும், பேருந்து நிலையங்களிலும், சுற்றித்திரியும் பிச்சைக்காரர்களுக்கு காசு, பணம் பிச்சை போடக்கூடாது. மாறாக அவர்களுக்கு உணவு, உடையாக வாங்கி கொடுக்க வேண்டும்.

பணமாக பிச்சை போடுவதால் அவர்களுக்கு சோம்பேறி தனம் அதிகரிக்கிறது என்று ஈரோட்டில் இயங்கிவரும் அட்சயம் அறக்கட்டளை வலியுறுத்தி வருகிறது. இதில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் அங்கத்தினர்களாக உள்ளனர்.
இதுகுறித்து அட்சயம் அறக்கட்டளை நிறுவனர் நவீன்குமார், "குமாரபாளையம், ஈரோடு பகுதியை சேர்ந்த பல தனியார் கல்லூரி மாணவ, மாணவியர், எங்கள் அறக்கட்டளையில் அங்கத்தினர்களாக உள்ளனர்.
நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் ஈரோட்டில் 320 பிச்சைக்காரர்கள் உள்ளனர். வரும் நாட்களில் மாவட்டம் முழுவதும் உள்ள பிச்சைக்காரர்களை கணக்கெடுத்து, அவர்களை ஒழிப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளபப்டும். பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போட கூடாது. அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என எண்ணம் வந்தால், மாறாக உணவு, உடை வாங்கிக் கொடுங்கள் என்று பொதுமக்களிடம் வலியுறுத்தி வருகிறோம்.
அதே வேளையில் பிச்சை எடுப்பவர்களின் நிலையை அறிந்து, அதற்கு ஏற்ப உதவிகளை செய்து வருகிறோம். முன்பு பிச்சை எடுத்து பிழைத்த இருவர், ஒரு கல்லூரியில் பணியாற்ற வாய்ப்பு பெற்று கொடுத்துள்ளோம்.
இதே போல் தனியார் பில்டர்ஸ் நிறுவனம், இரண்டு பிச்சைக்காரர்களுக்கு வேலை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. பிச்சைக்காரர்களை கண்டறிந்து அவர்களுடன் பேசி, வேலை செய்ய அழைத்து செல்வோம். இதுகுறித்து தனியார் நிறுவனங்களுடன் பேசி வருகிறோம்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications