மதுவிலக்குப் பற்றிப் பேசும் கருணாநிதி இதைச் செய்ய வேண்டியதுதானே... டாக்டர் ராமதாஸ் தாக்கு
மதுரை: மது விலக்கு பற்றிப் பேசுகிறார் கருணாநிதி. முதலில் அவர் திமுகவினர் நடத்தும் மது ஆலைகளை மூடச் சொல்லட்டும். பிறகு மதுவிலக்கு குறித்து அவர் பேசலாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மதுரையில் ஆகஸ்ட் 23 ம் தேதி பாமக மண்டல மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி மதுரை பார்சூன் பாண்டியன் ஓட்டலில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

அனைவரும் சேர்ந்தால்தான் வெற்றி கிடைக்கும்
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு, சசிபெருமாள் இறப்பு தொடர்பாக வைகோ- திருமாவளவன் அறிவித்துள்ள 4-ந் தேதி முழு அடைப்பு போராட்டத்தில் பாமக கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக அவர்கள் கூட்டம் நடத்தியது எங்களுக்கு தெரியாது. ஏனென்றால், அனைத்துக் கட்சியினரும் இதற்கு ஆதரவு தெரிவித்தால் தான் வெற்றி பெற முடியும்.

35 வருடமாக போராடி வருகிறேன்
மது விலக்கு கேட்டு, கடந்த 35 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன். பா.ம.க. தொடங்குவதற்கு முன்பு இருந்தே நான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளேன். தற்போது பல கட்சிகள் இது தொடர்பாக போராடுவதை வரவேற்கிறேன்.

முதலில் கருணாநிதி இதைச் செய்யட்டும்
மது விலக்கு பற்றி பேசும் கருணாநிதி தி.மு.க.வினர் நடத்தும் மது ஆலைகளை மூடச் சொல்ல வேண்டியது தானே?. நான் மது குடிக்கும் எனது கட்சி தொண்டர்கள், தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறேன். இதுபோல் வேறு யாராவது செய்வார்களா?

விவாதத்திற்குத் தயாராக இல்லையே ஸ்டாலின்
முதல்வராக தனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கூறி அன்புமணி சிலவற்றை பட்டியலிட்டு கூறினார். அதற்கு மு.க.ஸ்டாலின் தனக்கு அதனை விட பெரிய தகுதிகள் எல்லாம் இருக்கிறது என்று கூறி இருக்கலாம். அதை விட்டு, விட்டு, அநாகரிகமான முறையில் விமர்சிக்கிறார். ஸ்டாலினை, ஒரே மேடையில் விவாதிக்க அழைத்தோம். ஆனால் அதற்கு அவர் தயாராக இல்லை. ஆரோக்கிய அரசியலை தான் நாங்கள் விரும்புகிறோம்.

கூட்டணி கிடையாது
தமிழகத்தில் திமுக, அதிமுகவுடன் இனி கூட்டணியே கிடையாது. டெல்லியில் ஆம் ஆத்மி தனியாக போட்டியிட்டு ஆட்சி அமைக்கவில்லையா?. மாற்றத்தை விரும்பும் மக்கள் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள். எங்கள் தலைமையை ஏற்கும் பிற கட்சிகளுடன் கூட்டணி வைப்போம்.

திமுக ஆட்சிக்கு வரவே வராது
திமுக ஆட்சிக்கு வரப் போவதே இல்லை. அதிமுக மது விலக்கு கொண்டு வந்தால் வரவேற்போம். அதற்காக அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம். திராவிட கட்சிகள் தமிழகத்தை சீரழித்து விட்டன. எனவே அவர்களுடன் எப்போதுமே கூட்டணி கிடையாது.

கொள்ளுப் பேரப் பிள்ளைகள் மீது சத்தியம்
என் பிள்ளைகள் மீதும், பேரன்-பேத்திகள் மீதும், என் கொள்ளு பேரன்-பேத்திகள் மீதும் சத்தியம் செய்கிறேன். இனி அவர்களுடன் கூட்டணி கிடையாது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்ததற்காக தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறோம். எங்களை மன்னித்து விடுங்கள். எங்களுக்கு உங்கள் ஆதரவு தாருங்கள் என்றார் டாக்டர் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications