ஆழ்வார்பேட்டை கிளீனிக் டூ அதிமுக நிர்வாகி.... டாக்டர் வெங்கடேஷ்
ஜெயலலிதாவினால் விரட்டப்பட்ட டாக்டர் வெங்கடேஷ் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு கட்சியில் முக்கிய பதவி அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெங்கடேஷ் யார்? என்று தொண்டர்கள்
சென்னை: சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனனின் மகன் டாக்டர் வெங்கடேஷ். 2011ஆம் ஆண்டு ஜெயலலிதாவினால் கட்சியை விட்டு விரட்டப்பட்டவர். இப்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் யார், அதிமுகவில் அவர் செய்த பணிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
டிடிவி தினகரனின் மனைவியும் அப்போதய ஜெயா டி.வியின் எம்.டியுமான அனுராதாவின் சகோதரர்தான் வெங்கடேஷ். இவரது திருமணத்தை நடத்தி வைத்தது, ஜெயலலிதாதான்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசியலில் ஆர்வம் இல்லாமல்தான் இருந்தார். ஆழ்வார் பேட்டையில் கிளீனிக் நடத்தி வந்த இவர் டாக்டர் தொழிலை சின்சியராகப் பார்க்காவிட்டாலும், டயகனஸ்டிக் சென்டர் ஒன்றைத் தனியாக நடத்தி வந்தார். ஜெயலலிதா நேரடியாக சென்று இந்த சென்டரை திறந்து வைத்தாராம். தினகரன், மகாதேவன் ஆகியோர் ஓரம் கட்டப்பட்ட பிறகு, வெங்கடேஷை உள்ளே கொண்டு வந்தார் சசிகலா.
டாக்டர் வெங்கடேஷ்
நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் ஆஞ்ச நேயா பிரிண்டர்ஸில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். கட்சியின் போஸ்டர்கள், புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகளை நிர்வகித்து வந்தார். கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என்று வெங்கடேஷின் கை ஓங்கியது.
இளைஞர் இளம்பெண்கள் பாசறை
ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு மாநில செயலாளராகவும் ஆக்கப்பட்டார். வெங்கடேஷ்க்கு ஆதரவாக தினகரன், அனுராதா ஆகியோரின் ஆசியும் கிடைக்கவே மளமளவென உயர்ந்தார்.
பிரம்மாண்ட வளர்ச்சி
அதிமுகவில் அவருக்கு கிடைத்த வரவேற்பு, வேறு யாருக்கும் கிடைக்காத வகையில் படுபிரமாண்டமாக இருந்தது. கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் தனக்கு வேண்டியவர்களுக்கு இடம் வாங்கிக் கொடுத்தார். தனக்குப் பிடிக்காதவர்கள் மீது அவதூறு கிளப்பி ஒழிப்பதில் வெங்கடேஷ் கில்லாடியாம். அப்படி முடக்கப்பட்டவர்களில் ஒருவர் கலைராஜன் எம்.எல்.ஏ.!
கட்டம் கட்டப்பட்ட வெங்கடேஷ்
அதிமுகவின் தஞ்சை, திருவாரூர் மாவட்ட பொறுப்பாளராகவும் அந்தக் காலகட்டத்தில் பதவியில் இருந்தார் வெங்கடேஷ். கடந்த 2010ஆம் ஆண்டில் கட்சிப் பொறுப்பில் இருந்து டாக்டர் வெங்கடேஷ் அதிரடியாக நீக்கப்பட்டார். அந்த பொறுப்புக்கு கலைராஜன் நியமனம் செய்யப்பட்டார்.
கட்சியில் இருந்து நீக்கம்
தஞ்சை அருகே விஸ்வநாதன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை சேதப்படுத்தியதாகக் கூறி குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார் வெங்கடேஷ். 2011ஆம் ஆண்டு சசிகலாவின் உறவினர்களை போயஸ்தோட்டம், கட்சியை விட்டு ஜெயலலிதா விரட்டிய போது, வெங்கடேசும் விரட்டப்பட்டார். நிலம் சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மீண்டும் செல்வாக்கு
5 ஆண்டுகளாக வெங்கடேஷ் முகமே கட்சிக்காரர்களுக்கு மறந்து போன நிலையில் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு போயஸ்தோட்டத்திற்குள் நுழைந்தார். ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜிஹாலில் அருகிலேயே நின்று கொண்டிருந்தார். போயஸ் தோட்டத்தில் நிர்வாகிகளை சசிகலா சந்தித்த போது அருகிலேயே நின்று கொண்டிருந்தார்.
முக்கிய பொறுப்பு?
டிடிவி தினகரனும், வெங்கடேசும் நெருங்கிய உறவினர்கள். இவர்கள் இருவரின் கட்டுப்பாட்டில்தான் இப்போது கட்சியே உள்ளதாக கூறப்படுகிறது. டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதைப் போல வெங்கடேசும் விரைவில் முக்கிய பொறுப்புக்கு வருவார் என்று அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications