மதுவிலக்கு முடியாது… போதை மறுவாழ்வு சிகிக்சை மையம் அமைப்போம்: கனிமொழி
கோவை: பூரண மதுவிலக்கு கொண்டு வருவதில் சிரமம் தான் இருந்தாலும், மதுபழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மதுபழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்திடும் மருத்துவ முகாம் அமைப்பதை தேர்தல் பிரசாரத்தின் போது வலியுறுத்துவோம் என்று திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கூறியுள்ளார். எதிர்காலத்தில் மதுவிலக்கு கொண்டு வர முடியும் என்றால் அதனை அமல்படுத்தவும் தி.மு.க. தயங்காது எனவும் கனிமொழி கூறினார்.
சர்வதேச மகளிர் தினத்தை இரண்டு நாட்கள் விழாவாக கோவையில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் கொண்டாடுகிறது. இந்த முகாமினை தி.மு.க. மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி இன்று துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அங்கு நடக்கும் மருத்துவ முகாம், இளம்பெண்களுக்கான வேலை திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் ஆகியவற்றை பார்வையிட்ட கனிமொழி, ரத்த தானம் செய்து ரத்ததான முகாமினையும் துவக்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
மகளிர் தினவிழாவை இரு தின விழாவாக கொண்டாடி வருகிறோம். முதல் நாளான இன்று, வேலை திறன் மேம்பாட்டு பயிற்சி, மருத்துவ முகாம், ரத்த தான முகாம், கலைநிகழ்ச்சிகள், உணவு திருவிழா ஆகியவை நடக்கிறது.
தொடர்ந்து நாளை நடக்கும் நிகழ்ச்சியில் சமூகத்தின் பல தளங்களில் இயங்கும் பெண் சமூக செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டு அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஸ்டாலின் வருகை
மகளிர் மேம்பாட்டுக்கு என்னென்ன மாற்றங்கள் வர வேண்டும் என நினைக்கிறார்களோ, அது குறித்து அவர்கள் பேசுவார்கள். அதன் பின்னர் அதற்கு பதிலளித்து மு.க.ஸ்டாலின் பேசுவார்.
மதுவிற்கே வருமானம்
இந்த விழாவில் மதுவிலக்கு குறித்து பேசுவோம். நாட்டில் மிகப்பெரிய பிரச்னையாக மது உள்ளது. ஒரு குடும்பத்தின் வருமானம் 45 சதவீதம் அளவுக்கு மது அருந்த போகிறது. இதை முற்றிலும் நீக்க முடியாவிட்டாலும், எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்க வேண்டும்.
மதுவிலக்கு
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவீர்களா என கேட்கிறீர்கள். மதுவிலக்கு என்பது எந்த அளவு சாத்தியம் என தெரியவில்லை. கடைகள் எண்ணிக்கையை குறைத்து, மது எளிதில் கிடைக்கும் என்ற நிலையை மாற்றி, அதை அரிதாக்க வேண்டும்.
சிகிச்சை மையங்கள்
மேலும் மது போதையில் சிக்கியவர்களை அதில் இருந்து வெளிக்கொண்டு வர, சிகிச்சை முகாம்களை உருவாக்க வேண்டும். அதை நாங்கள் செயல்படுத்துவோம். எதிர்காலத்தில் மதுவிலக்கு கொண்டு வர முடியும் என்றால் அதனை அமல்படுத்த தி.மு.க. தயங்காது என்றார்.












Click it and Unblock the Notifications