போக்குவரத்து லஞ்சத்தை ஒழிக்க வந்துருச்சு “இ-சலான்” கருவி
கோவை : கோவை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க நவீன வசதிகளுடன் கூடிய "இ சலான்" சிஸ்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் அபராதம் வசூலிக்கும் போலீசாரும், வாகன ஓட்டிகளும் எவ்வித முறைகேட்டிலும் ஈடுபட முடியாது.
மாநிலம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து கைப்பட ரசீது எழுதி "சீல்" வைத்து தருகின்றனர்.

ரசீது முறைகேடு:
இந்த முறையில் வாகன ஓட்டி, கமிஷனர் அலுவலகம், கோப்புக்களுக்கு என்று மூன்று ரசீதுகள் எழுதப்படுகின்றன.இதில் முறைகேடுகள் நடக்க பெருமளவில் வாய்ப்புள்ளது.

இ-சலான் முறை:
இந்த முறைகேடுகளை தவிர்க்க தடுக்க மாநிலம் முழுவதும் போலீஸ் கமிஷனர் அலுவலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் "இ சலான்" என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சோதனை முயற்சி:
இதற்காக போக்குவரத்து போலீசாருக்கு நவீன வசதிகளுடன் கூடிய கருவி கையில் வைத்து உபயோக்கிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளன. கோவை மாநகர போக்குவரத்து போலீசில் ஒரு மாத காலம் சோதனை முயற்சியாக நேற்று முதல் இத்திட்டம் துவக்கப்பட்டது.

பதிவாகும் தகவல்கள்:
இக்கருவியில் போக்குவரத்து விதிமுறை மீறும் வாகனங்களின் எண்ணை பதிவு செய்தால் போதும். வட்டார போக்குவரத்து அலுவலக "சர்வர்"களுடன் இணைக்கப்பட்டுள்ள கருவியில் குறிப்பிட்ட வாகன ஓட்டியின் பெயர், வாகனத்தின் இன்ஜின் எண், வீட்டு முகவரி உள்பட அனைத்து தகவல்களும் உடனடியாக தெரிந்து விடும்.

உடனே “பில்லிங்” :
"நோ பார்க்கிங்" லைசன்ஸ் இல்லாதது போன்ற 78 போக்குவரத்து விதிமீறல்கள் குறித்த தகவல்கள் இதில் உள்ளன. அபராத தொகை சலானை "பிரிண்ட்" எடுத்து வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படும்.

ஜிபிஎஸ் வசதி உள்ள கருவி:
இதன் மூலம் போலீசார் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க முடியும்.போக்குவரத்து போலீசார் கூறுகையில், "இந்த நவீன கருவியில் ஜிபிஆர்எஸ், ஜிபிஎஸ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன் மூலம் போலீசாரின் இருப்பிடம் நடவடிக்கைகளை உயர் அதிகாரிகள் கண்காணிக்கலாம்.

15 ஸ்டேஷன்களுக்கு கருவி:
தங்கள் எல்லைக்குள் இல்லாமல் வேறு பகுதியில் போலீசாரால் அபராதம் வசூலிக்க முடியாது.மாநகரின் 15 ஸ்டேஷன் போக்குவரத்து எஸ்ஐகளுக்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது.

மாற்றி பயன்படுத்த இயலாது:
ஒருவர் கருவியை வேறு ஒருவர் மாற்றி பயன்படுத்த முடியாது. இதற்காக பிரத்யேக ஐ.டி. மற்றும் "பாஸ்வேர்ட்" எண் கொடுக்கப்பட்டுள்ளது. திருட்டு வழக்கில் தேடப்படும் வாகனங்கள் பெயர் மோசடி உள்ளிட்ட அனைத்தையும் கண்டுபிடித்துவிடலாம்"என்றனர்.

பிரிவு வாரியாய் கருவி:
கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து போலீஸ் எல்லைகளுக்கு ஏழு, மேற்கு பிரிவு போலீஸ் எல்லைகளுக்கு எட்டு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications